துபாய்: தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட இளம் குர்திய மாது உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில், ஈரானில் ஞாயிற்றுக்கிழமை அங்குமிங்கும் போராட்டங்கள் தொடர்ந்தன.
கட்டாய ஆடை விதிமுறையை மீறியதாகக் கூறப்பட்ட 22 வயது மஹ்சா அமினி, நன்னடத்தை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, ஈரானில் பெருமளவில் போராட்டங்கள் வெடித்தன. அனைத்துலக அளவில் கண்டனக் குரல்களும் எழுந்தன.
மஹ்சாவின் தந்தை அம்ஜத் அமினி, கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தம் மகள் இறந்து ஓராண்டு நிறைவைக் குறிப்பதற்கு எதிராக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, அடையாளம் தெரியாத நபர்கள் தென் ஈரானில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூவர் காயமுற்றனர்.
அச்சம்பவத்துக்கும் தற்போதைய போராட்டத்துக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை.

