ஜார்ஜ்டவுன்: மலேசியாவில் நன்கு சம்பாதித்து வந்த இணையவழிச் சேவை ஊழியர்கள் இப்போது சிரமங்களை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோக ஓட்டுநர்கள் போன்றோர் அவர்களில் அடங்குவர்.
கூடுதல் போட்டித்தன்மை, கொவிட்-19 கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டது, கட்டண முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் மலேசியாவில் விநியோக ஓட்டுநர்கள் முன்பைவிடக் குறைவாக சம்பாதிக்கின்றனர்.
“அதற்கான பொற்காலம் முடிந்துவிட்டது. குறிப்பாக கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் வெளியே உணவருந்த முடியாமல் இருந்த ஒரே காரணத்தால் மாதந்தோறும் ஆயிரம் கணக்கான ரிங்கிட் சம்பாதித்த விநியோக ஓட்டுநர்களுக்கு இது பொருந்தும்,” என்றார் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் வல்லுநராகப் பணியாற்றும் பேராசிரியர் சின் யீ வா.
“இணையவழி சேவைகளில் ஈடுபடுவோரை நடுத்தர வருமான ஊழியர்களாகக்கூட வகைப்படுத்த முடியாது. கூடுதல் பேர் இந்த வேலைகளைச் செய்யும்போது ஒரு விநியோக ஓட்டுநரின் சம்பளம் குறைவது அதற்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.
விரைவில் அதிகப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற இளையர்களின் ஆசையைக் கருத்தில்கொள்ளும்போது அவர்கள் தொடக்கத்தில் நல்ல சம்பளத்தை ஈட்டித் தரும் இணையவழிச் சேவைகளில் ஈடுபடுவதைப் புரிந்துகொள்ளமுடியும் என்று பேராசிரியர் சின் குறிப்பிட்டார்.
குறிப்பாக சிஜில் பெலாஜாரான் மலேசியா (எஸ்பிஎம்) கல்வியை முடித்தவர்களுக்கு இது பொருந்தும் என்றார் அவர். மலேசியாவில் எஸ்பிஎம் கல்வி, சிங்கப்பூரில் இருக்கும் ஜிசிஇ சாதாரண நிலைக் கல்விக்கு ஈடானது.