‘மலேசியாவின் கடல்நீர், கடல் உணவு பாதிக்கப்படவில்லை’

‘மலேசியாவின் கடல்நீர், கடல் உணவு பாதிக்கப்படவில்லை’

1 mins read
28ece4bc-4a26-49d2-b3e4-fb41625b712b
சாபாவில் கடல்நீர்க் கண்காணிப்புச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. - படம்: தமிழ் முரசு

கோலாலம்பூர்: அண்மையில் ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையிலிருந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலுக்குள் விடப்பட்டது.

ஆனால், தனது கடல் பகுதிக்கும் கடல் உணவுக்கும் இதன் காரணமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லீ காங் தெரிவித்துள்ளார்.

மலேசிய கடற்பகுதியில் உள்ள கடல்நீரின் கதிரியக்க அளவு அபாயகரமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

2011ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி காரணமாக ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலை சேதமடைந்தது. அந்தச் சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதை அமைச்சர் சாங் சுட்டினார்.

இதுவரை மலேசிய கடல்நீர் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார். அண்மையில் கடலுக்குள் விடப்பட்ட தண்ணீர் மலேசியக் கடற்பகுதியை அடைய இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என்றார் அமைச்சர் சாங்.

“முழுமையான பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலவரப்படி கவலைப்படத் தேவையில்லை,” என்றார் அவர்.

சாபாவில் இருக்கும் படகுத்துறை ஒன்றில் கடல்நீர் கண்காணிப்புச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாக திரு சாங் தெரிவித்தார்.

இவ்வாண்டு மேலும் நான்கு சாதனங்களைப் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வியட்னாமும் சிங்கப்பூரும் கடைப்பிடிக்கும் இந்த அணுகுமுறையை மலேசியாவும் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்