தைப்பே: தைவானின் காவ்சியுங் நகரில் தங்களுக்கு ஒருமாடிக் கீழே வசித்த ஆடவர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்ட தம்பதியின் உடல்களில் மொத்தம் 13 கத்திக்குத்துக் காயங்கள் கண்டறியப்பட்டன.
அத்தம்பதியின் சிறு வயது மகன்களின் கண்களுக்கு முன்னால் இந்தக் கொலை நடந்தது.
அத்தம்பதி வசித்த குடியிருப்புக் கட்டடத்தின் 14வது மாடியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.
வூ எனும் பெயர் கொண்ட அந்தச் சந்தேக ஆடவர், அத்தம்பதியின் வீட்டிற்குள் நுழைந்தபோது கத்தியை ஏந்தியிருந்தார். அவர்களைத் தாக்கிவிட்டு அந்த இடத்திலிருந்து அவர் தப்பியோடினார்.
அந்தத் தாக்குதலைக் கண்ட ஆறு, ஏழு வயதுடைய அத்தம்பதியரின் மகன்கள், இச்சம்பவத்தில் காயமடையவில்லை.
அக்குடியிருப்புக் கட்டடத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு இறங்கிச் சென்ற அவர்கள், தங்கள் பெற்றோர் கொல்லப்பட்டதாகவும் 13வது மாடியில் வசித்த ஒருவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும் கூறி அழுதனர். அங்கிருந்த பாதுகாவல் அதிகாரி காவல்துறையை அழைத்தார்.
கார் பழுதுபார்ப்புக் கடையின் ஓய்வுபெற்ற ஊழியரான வூ, 63, அந்நகரைவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பியோடினார். ஆனால், மூன்று மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச் சென்ற திசையைக் கண்காணிப்புக் கருவிகளில் தாங்கள் ஆய்வு செய்ததாகவும் காவ்சியுங்கிற்கு தெற்கே உள்ள பிங்துங் எனும் பகுதியில் அவரைக் கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரைச்சல் தொடர்பில் அத்தம்பதிக்கும் வூக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கொலை நடந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டுத் தரையில் பொருள்களால் அடிப்பதுபோன்ற சத்தம் ஒவ்வொரு நாளும் கேட்டதாக வூவின் மகன் தங்களிடம் கூறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மேல் மாடியிலிருந்து இரைச்சல் வருவது தொடர்பில் வூ பலமுறை புகார் அளித்திருந்ததாக அக்குடியிருப்புக் கட்டட நிர்வாகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறினார். இந்தப் பிரச்சினை குறித்து அண்டைவீட்டார் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர் சொன்னார்.

