ஐநா: உக்ரேன் மீது படை எடுத்து இருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றுபடும்படி உலகத் தலைவர்களுக்கு உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளினால்தான் உலகம் எதிர்நோக்கும் முக்கியமான சவால்களுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுப் பேரவையில் பெரும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.
ரஷ்யா 2022ல் உக்ரேன் மீது படை எடுத்தது. அதுமுதல் திரு ஸெலென்ஸ்கி இப்போதுதான் முதன்முதலாக ஐநா பொதுப் பேரவையில் நேரடியாக உரையாற்றினார்.
உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததைப் போன்ற ஒரு செயலை வேறு எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாட்டின் மீதும் செய்யத் துணியாதபடி தன்னால் ஆன அனைத்தையும் செய்து ரஷ்யாவை உக்ரேன் ஒரு கை பார்த்துவருகிறது என்று அவர் கூறினார்.
ஆயுதமயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்ப வேண்டும். ரஷ்யா பின்வாங்கி தன் சொந்த நிலத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று திரு ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
இதை உலகத் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று செய்துகாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உக்ரேனிடம் இருந்து தான் கைப்பற்றிய நிலத்திற்குத் தானே சொந்தக்காரர் என்ற அனைத்துலக அங்கீகாரம் தனக்குக் கிடைக்க வேண்டும் என ரஷ்யா செயல்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக அது உலக உணவுச் சந்தையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உக்ரேன் அதிபர் புகார் தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் கூடிய போரில் தனக்கு ஆதரவாக தென் உலகின் ஆதரவை திரு ஸெலென்ஸ்கி நாடுகிறார்.
உலகில் பருவநிலை நெருக்கடிகள் மோசமாகி வருகின்றன. இயற்கைப் பேரிடர்கள் நிகழ்கின்றன. இந்த நிலையில், நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை ஒடுக்க வேண்டும்.
நம்முடைய அனைத்து ஆற்றலையும் சக்தியையும் உலகச் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இதனிடையே, உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிட்டதாக செவ்வாய்க்கிழமை உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள்.
இவ்வேளையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு உதவியாக விரைவில் அமெரிக்காவின் அப்ராம்ஸ் என்ற அதிநவீன போர் கவச வாகனங்கள் உக்ரேனைச் சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஸ்டின் செவ்வாய்க்கிழமை இது பற்றி அறிவித்தார்.
உக்ரேனை ஆக்கிரமித்து இருக்கும் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் உக்ரேன் மெதுவாக முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், போர்க்களத்தில் உக்ரேனுக்கு சக்தி வாய்ந்த புதிய ஆயுதம் கிடைக்க வேண்டும்.
இதற்குத் தோதாக அப்ராம்ஸ் கவச வாகனங்கள் விரைவில் உக்ரேனைச் சென்று சேரும் என்று அமெரிக்க அமைச்சர் தெரிவித்தார்.

