ஜோகூர் பாரு: மலேசியாவில் மழையில் நடந்துகொண்டிருந்த ஒரு முதியவரை வாகனத்தில் ஏற்றிச் சென்று உதவிய இரண்டு காவல்துறை அதிகாரிகளை இணையப் பயனீட்டாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் பதிவான காணொளி முவார் வட்டார காவல்துறைப் பிரிவின் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. முதியவருக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை அதிகாரிகள் கார்ப்பரல் ஏரீஸ், கார்ப்பரல் அஸ்மி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தின் முவார் மாவட்டத்தில் இருக்கும் பாக்ரி நகரில் ஒரு குடியிருப்பு வட்டாரம் வழியே முதியவர் ஒருவர் மழையில் மெதுவாக நடந்து சென்றிருக்கிறார். அவரின் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் மஞ்சள் நிறக் குடையும் இருந்தன.
முதியவரைக் கண்டவுடன் சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் தங்களின் வாகனத்தை நிறுத்தி அவரை வீட்டில் இறக்கிவிட்டனர். முதியவரின் வீடு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பாரிட் ஸின் எனும் குடியிருப்புப் பகுதியில் இருந்தது.
காவல்துறை அதிகாரிகளின் கனிவன்புமிக்க செயல் இணையப் பயனீட்டாளர்களின் மனதை உருக்கியிருக்கிறது.

