அனைத்துலகக் கடல் பாதுகாப்பு குறித்த முதல் உடன்பாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகள் புதன்கிழமை கையெழுத்திட்டன.
இந்த உடன்பாடு விரைவில் நடப்புக்கு வந்து, அழியக்கூடிய அபாயத்தில் உள்ள பல்லுயிரினச் சூழலைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
“இது அற்புதமானதொரு தருணம். இந்த அளவுக்குப் பன்னாட்டு ஒத்துழைப்பைப் பார்க்கும்போது அதிக நம்பிக்கை பிறக்கிறது,” என்று நியூயார்க் நகரில் கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் நடிகை சிகோர்னி வீவர் கூறினார்.
“கடலை ஒரு பெரிய குப்பைத் தொட்டியாகவும், விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் இடமாகவும் கருதாமல், நாம் கவனித்துக்கொள்ளும், பொறுப்பேற்றுக்கொள்ளும், மரியாதையளிக்கும் இடமாகக் கருதும்” மனமாற்றத்தின் அடையாளமாக உடன்பாடு திகழ்வதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
முதல் நாளன்று 67 நாடுகள் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அதில் உள்ளடங்கியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூரின் சார்பில் புதன்கிழமை உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
ஆனால், உடன்பாடு நடப்புக்கு வர, ஒவ்வொரு நாடும் அதன் உள்நாட்டு முறைப்படி உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். அறுபது நாடுகள் உறுதிப்படுத்தி 120 நாள்களுக்குப் பிறகு உடன்பாடு நடப்புக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
கடலின் பல்லுயிரினங்களைப் பாதுகாக்கும் உடன்பாடு, 15 ஆண்டுகாலக் கலந்துரையாடலுக்குப் பிறகு மார்ச் மாதம் முடிவானது.
பூமியின் நிலத்திலும் கடலிலும் 30 விழுக்காட்டைப் பாதுகாப்பதற்காகச் சென்று ஆண்டு வகுக்கப்பட்ட இலக்கை அடைய இந்த உடன்பாடு முக்கியம்.
உடன்பாடு நடப்புக்கு வந்தபின், மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படும் கடற்பகுதிகள் உருவாக்கப்படும். மனிதர்கள் கடற்பகுதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பு நேர்கிறதா என்பதும் மதிப்பிடப்படும்.
இதற்கிடையே, பருவநிலைக் கொள்கையை நிலைநாட்ட மிகுந்த முயற்சி எடுக்கும் உலகத் தலைவர்களை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் நியூயார்க் நகரில் நடத்திய சிறப்பு மாநாட்டில் சீன, அமெரிக்கத் தலைவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
பருவநிலை செயல்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே மாநாட்டில் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று திரு குட்டரஸ் கூறியிருந்தார். உலகிலேயே ஆக அதிக தூய்மைக்கேட்டுக்குக் காரணமான நான்கு நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தது. சீனா மற்றும் இந்தியாவின் உயர் தலைவர்கள் இவ்வார ஐநா கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை.

