சிட்னி: உள்நாட்டு மக்களை அங்கீகரிப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பில் பங்கேற்க இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான ஆஸ்திரேலியர்கள் முன்வந்து உள்ளனர். அக்டோபர் 14ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
‘நாடாளுமன்றத்திற்கான குரல்’ என்று பொருள்படக்கூடிய உள்நாட்டு ஆலோசனை அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பில் பங்கேற்பவர்களிடம் கருத்துக் கேட்கப்படும்.
ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள் மற்றும் டோரஸ் நீரிணை தீவில் வசிப்போரைப் பாதிக்கக்கூடிய அம்சங்களில் இந்தக் குழு ஆலோசனை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வாக்கெடுப்பு தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தகுதி உள்ள ஆஸ்திரேலியர்களில் சாதனை அளவாக 97.7 விழுக்காட்டினர் வாக்கெடுப்பில் பங்கேற்கப் பதிவு செய்து உள்ளதாக அந்த அறிக்கை கூறியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலிய வாக்காளர் எண்ணிக்கை 2.6 விழுக்காடு அதிகரித்து உள்ளதாவும் அது தெரிவித்தது.
“வாக்கெடுப்பில் பங்கேற்க இருக்கும் இளையர்களின் விகிதமும் 91.4 விழுக்காடு அதிகரித்துவிட்டது.
“அதன் காரணமாக 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 1.8 மில்லியன் பேர் முதல்முறை பொது வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்,” என்று அறிக்கை சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
“ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
“அப்போதைய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 8.4 மில்லியன் ஆஸ்திரேலியர்கள், அதாவது 47 விழுக்காட்டினர் அதில் பங்கேற்கவில்லை,” என்றும் அது தெரிவித்தது.
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற தேசிய அளவில் பெரும்பான்மை தேவை.