பேங்காக்: பங்ளாதேஷில் அடைக்கலம் புகுந்து வாழ்க்கையை நகர்த்தி வரும் ரோஹிங்யா அகதிகள், தங்களது சொந்த நாட்டைக் காட்டிலும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து உள்ளனர்.
பங்களாதேஷின் தென்கிழக்குக் கடற்கரை நகரான கோக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி உள்ளவர்களிடம் சில அமைப்புகள் நேர்காணல் நடத்தின.
மியன்மாரில் பாகுபாட்டையும் நடமாட்டக் கட்டுப்பாட்டையும் அனுபவித்த தாங்கள் தற்போது பங்ளாதேஷில் அதைவிட மோசமாக நடத்தப்படுவதாக நேர்காணலில் பங்கேற்றோரில் 65 விழுக்காட்டினர் கூறினர்.
‘யூத் காங்கிரஸ் ரோஹிங்யா (ஒய்சிஆர்)‘ என்னும் அகதிகள் தலைமையில் இயங்கும் மக்கள் சமூக அமைப்பும் ‘ஃபோர்டிஃபை ரைட்ஸ்’ என்னும் அரசு சாரா அமைப்பும் இந்த நேர்காணலை நடத்தின.
30 வெவ்வேறு முகாம்களைச் சேர்ந்த 241 அகதிகளிடம் கருத்தாய்வும் 54 அகதிகளிடம் தீவிரமான நேர்காணலும் நடத்தப்பட்டன.
பங்ளாதேஷ் அரசாங்கத்தைப் பற்றி பல்வேறு குறைகளைச் சொல்வதால் பெயர்களை வெளியிட வேண்டாம் என கருத்தாய்வில் கலந்துகொண்டோர் கேட்டுக்கொண்டனர்.
ஆய்வறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
எங்கும் செல்லமுடியாத அளவுக்குக் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள், தங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றால் வாழும் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்களில் சிலர் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
உயிரை மாய்த்துக்கொள்ளத் தோன்றுவதாக மேலும் சிலர் தெரிவித்ததாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குச் செல்லக்கூட தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் முள்கம்பிகளால் வேலி அடைக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் எந்நேரமும் சுற்றி வருவதாகவும் ரோஹிங்யா அகதிகள் கூறினர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அடக்குமுறைக்கு அஞ்சி 700,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா மக்கள், மியன்மாரில் இருந்து தப்பி அருகிலுள்ள பங்ளாதேஷுக்கு ஓடினர்.
2021ஆம் ஆண்டு ராணுவம் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையால் மியன்மாரில் எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து மேலும் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் பங்ளாதேஷில் அடைக்கலம் புகுந்தனர்.
தற்போதைய நிலையில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பங்ளாதேஷில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

