கோலாலம்பூர்: மலேசியாவால் மீண்டும் செழிப்பான பொருளியல் நாடாக உருவெடுக்க முடியும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
திறமையான ஊழியரணி, பொருளியல் வளர்ச்சிக்குத் தேவையான வலுவான அடித்தளம் போன்றவை அந்நாட்டிடம் இருப்பது அதற்குக் காரணம் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
செழிப்பான பொருளியலாக மலேசியா உருவெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் தமது ஒருமைப்பாட்டு அரசாங்கம், தேசிய எரிசக்தி உருமாற்றுத் திட்டம் (என்இடிஆர்), புதிய தொழில்துறை பெருந்திட்டம் 2030 (என்ஐஎம்பி 2030) உள்ளிட்ட திட்டங்களை வரைந்திருப்பதாகவும் திரு அன்வார் சுட்டினார்.
தேசிய எரிசக்தி உருமாற்றுத் திட்டத்தின்கீழ் 25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் உள்ளன. மறுபயனீட்டு எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மலேசியாவை மையமாக்குவது தேசிய எரிசக்தி உருமாற்றுத் திட்டத்தின் இலக்கு என்றார் திரு அன்வார்.
அதேவேளையில், புதிய தொழில்துறை பெருந்திட்டம் 2030 இதற்கு முன்பிருந்த திட்டத்தின் மாற்று வடிவம் அல்ல; இத்திட்டம் அதிலிருந்து வேறுபட்டது என்றும் இது குறிப்பிட்ட நடவடிக்கைகளிலும் இலக்குகளிலும் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மலேசிய வம்சாவளியினர், மாணவர்கள் ஆகியோருடன் நடைபெற்ற இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
வர்த்தக நாடான மலேசியாவின் வெற்றி, அதன் முதலீடுகளை ஈர்க்கும் திறமையிலும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிப்படுத்தும் ஆற்றலிலும் உள்ளது என்பதையும் திரு அன்வார் விளக்கினார்.
“இதில்தான் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றவேண்டும். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மலேசியரும் தன்னை மலேசியாவின் தூதராக நினைத்துக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். புதிதாக எழுந்திருக்கும் மலேசியத் துடிப்பைப் பிரதிநிதித்து நமது கொள்கைகளைக் கடைப்பிடித்து செயல்படவேண்டும்,” என்று திரு அன்வார் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரவு விருந்தில் கலந்துகொண்ட சுமார் 1,000 பேரில் சிலர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவர்களும் மலேசியா முன்னேறவேண்டும் என்று விரும்புவர் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு அன்வார் கூறினார்.
“மலேசியா மீண்டும் எழ வகைசெய்வது நமது கனவு, எமது கனவு, உங்கள் கனவு. நான் மனதாரச் சொல்கிறேன், மலேசியர்கள்மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.