ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சினாய் அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணப் பாதைகளை அதிகரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் விமான நிறுவனங்களுடனும் ஜோகூர் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஜோகூர் சுற்றுப்பயண, சுற்றுப்புற, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே.ரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
“தரவுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் ஜோகூருக்கு வந்து செல்கின்றனர்.
“எங்களது சுற்றுப்பயணத்துறை மேம்பட்டு வருகிறது. அது இன்னும் சிறந்து விளங்க நாங்கள் விரும்புகிறோம். எனவேதான், விமானப் பயணப் பாதைகளை அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று அவர் விவரித்தார்.
தற்போது சினாய் விமான நிலையத்திற்கும் வியட்னாமின் ஹோ சி மின் நகர், தாய்லாந்து தலைநகர் பேங்காக், இந்தோனீசியாவின் ஜகார்த்தா மற்றும் சுரபாயா நகர்கள், சீனாவின் குவாங்சோவ் நகர் ஆகியவற்றுக்கும் இடையே விமானச் சேவைகள் இடம்பெறுகின்றன.
“சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கூடுதலான விமானப் பயணப் பாதைகளை இயக்குவது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்றார் திரு ரவீன்.