வாஷிங்டன்: சில தீவிரவாத குடியரசுக் கட்சியினர் வரவுசெலவுத்திட்டத்தை முடக்கி, அதன்மூலம் அரசாங்கத்தை முடக்கப் பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சிக்கலைத் தீர்க்குமாறு அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
காங்கிரசின் ‘பிளாக் காகஸ் விருது’ விருந்து நிகழ்வில் பேசிய திரு பைடன், தானும் குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கார்த்தியும் அரசாங்க செலவு குறித்து முன்னர் ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
“இப்போது சில தீவிரவாத குடியரசுக் கட்சியினர் அதை எதிர்க்கின்றனர். அதனால் இப்போது அமெரிக்காவில் உள்ள அனைவரும் அதற்கான விலையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அரசாங்க சேவைகளுக்கான நிதி முற்றாக துடைக்கப்படுவதற்கு முன்னதாக, செலவின மசோதா உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள நாடாளுமன்றத்துக்கு செப்டம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு வரை காலக்கெடு உள்ளது.
“அரசாங்கத்திற்கு நிதியளிப்பது காங்கிரசின் மிக அடிப்படையான பொறுப்புகளில் ஒன்றாகும். குடியரசுக் கட்சியினர் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பணியைத் தொடங்க வேண்டிய நேரம் இது,” என்று திரு பைடன் கூறினார்.
அரசாங்க முடக்கம், பூங்காக்கள், அரும்பொருளகங்கள் மற்றும் பல இடங்களில் வேலை பார்க்கும் நூறாயிரக்கணக்கான ஊழியர்களின் சம்பளத்துக்கு ஆபத்தாகிவிடும்.
எத்தகைய வரவுசெலவு திட்ட மசோதாவாக இருந்தாலும் 24 பில்லியன் அமெரிக்க டாலர்களை (S$32.8 பில்லியன்) கியவ்விற்கு ராணுவ, மனிதாபிமான உதவி வழங்க ஒதுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை விரும்புகிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய திட்டத்தை செனட்டில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும்ஆதரித்தாலும், சில உறுப்பினர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்.