வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியும் சளிக்காய்ச்சலுக்கான ஆண்டு ‘இன்ஃப்ளூயன்ஸா’ தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார்.
அமெரிக்கா சளி, காய்ச்சல் பருவத்தை எதிர்கொள்வதால், அனைத்து அமெரிக்க மக்களையும் பைடனை முன்மாதிரியைப் பின்பற்றுமாறு அதிபரின் மருத்துவர் கெவின் ஓ’கானர் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தங்களது மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 சோதனைக் கருவிகளை உருவாக்கும் 12 அமெரிக்க நிறுவனங்களுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை ($820 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அமெரிக்கா இந்த வாரம் அறிவித்தது.
சளி, காய்ச்சல் பருவம் நெருங்கி வருவதால், அமெரிக்கர்கள் மீண்டும் கொவிட்-19 சோதனைக் கருவிகளை இலவசமாகப் பெற தகுதி பெறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் திங்கள்கிழமை முதல் அஞ்சல் மூலம் நான்கு விரைவுச் சோதனைக் கருவிகள் அனுப்படும்.
கொவிட்-19 தொற்றுக்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முந்தையதை விட செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் 7.7% உயர்ந்துள்ளது.