கோத்தா கினபாலு: மலேசியாவின் கோத்தா கினபாலுவில் உள்ள ஏர்பிஎன்பி வாடகை அறையில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சீனாவிலிருந்து சுற்றுப் பயணம் வந்த இளம் ஜோடி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செப்டம்பர் முதல் வாரத்தில் அங்கு தங்கியபோது ரகசிய கேமராவைக் கண்டுபிடித்ததாக புதிதாக திருமணமான அந்தத் தம்பதி கூறினர்.
இந்த விவகாரத்தை செப்டம்பர் 14ஆம் தேதியன்று சமூக ஊடகத்தில் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.
இது, அதிவேகமாகப் பரவியதோடு பலர் சம்பவத்தை பலவாறு விமர்சித்திருந்தனர்.
கோத்தா கினபாலு காவல்துறை தலைவர் ஸைடி அப்துல்லா, ரகசிய கேமரா சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.
தம்பதியிடமிருந்து இது குறித்து புகார் வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“சாபாவில் தம்பதி தங்கிய அறையில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதை தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதற்கு காரணமானவர்களைத் தேடி வருகிறோம்.
“இதில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது,” என்று ஸைடி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே அந்த அறையை காவல்துறையினர் சோதனையிட்டதில் உளவு பார்க்கும் கேமரா ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் சீனத் தம்பதி கூறியுள்ளனர்.
இதனை சாபா காவல்துறை மறுத்துள்ளது.

