டொராண்டோ: கனடாவில் சீக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உண்டு என்று கனடா கூறுகிறது.
இதன் தொடர்பில் முக்கியமான ஒரு தகவலை அமெரிக்காவின் அரசதந்திரி ஒருவர் தெரிவித்து இருப்பதாக சனிக்கிழமை ஊடகம் ஒன்று கூறியது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகள் ‘ஐந்து கண்கள்’ என்ற வேவு கண்காணிப்பு, தகவல் பகிர்வு அமைப்பை அமைத்து இருக்கின்றன.
அந்தக் கண்காணிப்பு அமைப்பின் நாடுகளுக்கு இடையே வேவுத் தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.
அதன் காரணமாகத்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று அந்த அமெரிக்க அரசதந்திரி கூறியதாக ஊடகம் தெரிவித்து உள்ளது.
கனடாவில் 24 மணி நேரமும் செயல்படும் அனைத்துச் செய்தி ஒளிவழியான சிடிவி நியூஸ் சேனல் என்ற ஊடகம், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹனை மேற்கோள்காட்டி அவ்வாறு தெரிவித்து உள்ளது.
காலிஸ்தான் தனி நாடு கேட்டு போராடி வரும் அமைப்பைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 45, என்ற தீவிரவாதி கனடா நாட்டின் குடிமகனாக இருந்தார்.
அவர், ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள சுர்ரே என்ற நகரில் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டு இருக்கிறது என்று நம்புவதற்கான காரணம் இருப்பதாக கனடா பிரதமர் செப்டம்பர் 18ஆம் தேதி தெரிவித்தார்.
ஆனால், இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிராக புகார் கூறியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை மூண்டு வருகிறது.
‘‘ஐந்து கண்கள் அமைப்பில் இடம்பெறும் நாடுகளுக்கு இடையே வேவுத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
‘‘அதன் அடிப்படையில்தான் கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்தார்,’’ என்று தூதர் கோஹன் கூறியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டு இருக்கிறது.
ஐந்து கண்கள் அமைப்பின் நாடுகளுக்கு இடையில் அந்த சீக்கிய தீவிரவாதி கொலை தொடர்பில் வேவுத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இதுவரை வெளியாகி உள்ளன.
ஆனால், அமெரிக்க அரசதந்திரி ஒருவர் அவ்வாறு கூறி இருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.
‘‘கனடாவில் கிடைத்த தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிராக புகார் தெரிவிக்கவில்லை.
‘‘ஐந்து கண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு கூடுதலான தகவலையும் கொடுத்து இருக்கிறது என்று கனடா ஒளிபரப்புக் கழகமும் ஏபி செய்தி நிறுவனமும் தெரிவித்து இருக்கின்றன,’’ என்பதை சிடிவி ஊடகம் சுட்டிக்காட்டியது.
தூதர் கோஹன் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியாகி இருந்த ஒரு செய்தியை மறுத்தார்.
கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிரான புகாரை முன்வைத்ததற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட தன்னுடைய அணுக்க நாடுகளுக்கு கனடா ஒரு வேண்டுகோளை விடுத்ததாகவும் சீக்கிய தீவிரவாதிக் கொலையைப் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என்று கனடா கோரியதாகவும் ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து இருந்தது.
ஆனால், அதை தூதர் கோஹன் மறுத்துவிட்டார் என்றும் சிடிவி கூறியது.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் புகார் தெரிவித்து இருப்பது பற்றி அமெரிக்கா மிகவும் கவலைப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் கனடாவுடன் அமெரிக்கா அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அந்தக் கொலைக்கு யார் பொறுப்பு என்பதைக் காண அமெரிக்கா விரும்புவதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா இந்தியாவுடன் நேரடியாக தொடர்புகொண்டு வருகிறது என்று நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிளிங்கன் கூறினார்.
‘‘கனடா அதிகாரிகளுடன் மிக அணுக்கமாக கலந்து ஆலோசித்து வருகிறோம். அதோடு மட்டுமல்ல அவர்களோடு சேர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை கனடா நடத்தும் புலன்விசாரணை தொடர வேண்டும். அந்த விசாரணையில் இந்தியா கனடாவுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே முக்கியமானது.
‘‘கொலைக்கு யார் பொறுப்பு என்பதைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். புலன்விசாரணை தடையில்லாமல் நடக்கவேண்டும். முடிவு தெரிய வேண்டும்,’’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கூறினார்.

