அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்காவில் ஆகப்பெரிய இந்துக்கோயிலின் குடமுழக்கு

2 mins read
9e081a87-4447-4fcf-8322-fb2a68845994
நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே நகரில் அமைந்துள்ள சுவாமிநாராயண் அக்‌ஷர்தம் கோயில், இந்தியாவுக்கு வெளியே நவீன காலத்தில் கட்டப்பட்டுள்ள ஆகப் பெரிய கோயிலாகும். - படம்: இணையம்

ராபின்ஸ்வில் (நியூ ஜெர்சி): இந்தியாவுக்கு வெளியே உள்ள கோயில்களில் உலகின் ஆகப்பெரும் இந்துக் கோயில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் அக்டோபர் 8ஆம் தேதி குடமுழுக்குக் காணவுள்ளது.

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுவாமிநாராயண் அக்‌ஷர்தம் கோயிலை, இந்திய ஸ்தபதிகளின் வழிகாட்டுதலில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 12,500 தொண்டர்கள் கட்டியுள்ளனர்.

கடந்த 2011ல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 12 ஆண்டுகள் நடந்தது, தற்போது குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் இந்துக் கோவில் என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது.

ஏறக்குறைய 183 ஏக்கர் பரப்பில் கோயில் வளாகம் அமைந்துள்ளது.
ஏறக்குறைய 183 ஏக்கர் பரப்பில் கோயில் வளாகம் அமைந்துள்ளது. - படம்: இணையம்

கம்போடியாவில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில், புராதானப் பின்னணியில் உலகின் மிகப்பெரும் இந்துக் கோயிலாகும். 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக்கோயில், யுனெஸ்கோவின் உலக மரபுடைமைச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா கோயிலுக்கு அடுத்து, தற்போது நியூஜெர்சி கோயில் அமைந்துள்ளது.

ஏறக்குறைய 183 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயில் வளாகத்தத்தில் ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், 18 கோபுரக் கட்டமைப்புகள் உள்ளன.

ஏறக்குறைய 2 மில்லியன் பல்வேறு வகையான கற்கள், பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்டு இக்கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2 மில்லியன் பல்வேறு வகையான கற்கள், பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்டு இக்கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. - படம்: இணையம்

பளிங்கு, கிரானைட், கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கற்கள் முதலியவற்றால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்கேரியா, துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி, இத்தாலியில் இருந்து பளிங்குக் கல், இந்தியா, சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை தருவிக்கப்பட்டுள்ளன.

பழங்கால இந்து மத நூல்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் 10,000க்கும் மேற்பட்ட சிலைகளும் சிற்ப வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஈர்க்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை ஸ்தபதிகளின் மேற்பார்வையில் தொண்டூழியர்கள் செதுக்கியுள்ளனர்.
ஈர்க்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை ஸ்தபதிகளின் மேற்பார்வையில் தொண்டூழியர்கள் செதுக்கியுள்ளனர். - படம்: இணையம்
வேலைப்பாடுகள் நிறைந்த சுவர்களும் தூண்களும் கோயிலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.
வேலைப்பாடுகள் நிறைந்த சுவர்களும் தூண்களும் கோயிலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. - படம்: இணையம்

பிரம்ம குண்டம் எனப்படும் பெரிய கேணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நதிகளிலிருந்தும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் எங்குமிருந்து 300க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரால் இக்கேணி நிரப்பப்பட்டுள்ளது.

உலகின் பல சிறப்புகளையும் உள்ளடக்கிய இக்கோயிலைக் காண ஆயிரக்கணக்கான இந்துக்களும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்கெனவே திரளத்தொடங்கியுள்ளனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
கோயில்