2020க்குப் பிறகு வெளிநாட்டினரை முதன்முறையாக அனுமதிக்கும் வடகொரியா

1 mins read
a682c4b9-2f19-4d1f-a7c4-0209228cea6a
வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் ரயில் நிலையத்துக்கு வெளியே நடந்துசெல்லும் பாதசாரிகள். - படம்: ஏஎஃப்பி

பியோங்யாங்: கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தற்போது வெளிநாட்டவர்களை மீண்டும் அனுமதிப்பதாகத் தெரிகிறது.

திங்கட்கிழமையிலிருந்து வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று வடகொரியா அறிவித்துள்ளதாக சீன அரசாங்க ஊடகமான சிசிடிவி வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

வடகொரியாவுக்குள் நுழைவோர் அங்கு இரு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்தத் தகவல் குறிப்பிட்டது. இந்த அறிவிப்பு குறித்து வடகொரிய அரசாங்க ஊடகத்தில் உடனடியாகத் தகவல் இடம்பெறவில்லை.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளை வடகொரியா படிப்படியாகத் தளர்த்தி வந்துள்ளது. சீனாவையும் ரஷ்யாவையும் சேர்ந்த உயர்மட்டப் பேராளர் குழுவினரைக் கடந்த ஜூலையில் வடகொரியா அனுமதித்தது.

எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த அரசதந்திரிகள், மாணவர்கள், ஊழியர்களைத் திருப்பி அழைத்து வர கடந்த ஆகஸ்ட்டில் பெய்ஜிங்கிற்கும் விளாடிவோஸ்டோக்கிற்கும் விமானச் சேவைகளை வடகொரியா அனுப்பியது.

ரொக்கப் பற்றாக்குறையால் அவதியுறும் வடகொரியா வெளிநாட்டு நாணயங்களைப் பெற, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்