சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் பதவி விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த அவர், அம்மாநிலத்தில் ஆக அதிக காலம் முதல்வராக இருந்தவர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட அம்மாநிலத்தில் நவம்பர் நடந்த தேர்தலில் பாட்டாளிக் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிக்கு வழிநடத்திய ஓராண்டு காலத்துக்குள் திரு ஆண்ட்ரூஸ் பதவி விலகியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலை அவர் கையாண்ட விதம் சிலரால் விமர்சிக்கப்பட்டது. மாநிலத் தலைநகர் மெல்பர்ன் 262 நாட்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. உலகில் ஆக அதிக காலம் கொவிட்-19 முடக்கநிலை அமுல்படுத்தப்பட்ட மாநிலமாக விக்டோரியா உள்ளது.
“இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது எளிதான வேலை அல்ல,” என்று திரு ஆண்ட்ரூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் கூறினார்.
“என்னிடமிருந்தும் எனது குடும்பத்திடமிருந்தும் 100 விழுக்காடு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் வேலையைப் பற்றியே நினைக்க வேண்டியதாக இருக்கும். அது பெரும் சுமை,” என்று கூறிய அவர் அதற்கு காலவரையறை உண்டு என்றார்.
விலகுவதற்கான நேரம் இது என்றார் அவர்.
மத்திய அரசில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமையன்று அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

