வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் தளத்தில் ஊடுருவிய சீனாவைச் சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களைத் திருடிவிட்டார்கள்.
இதை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஊழியர் ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சின் 10 வெவ்வேறான பக்கங்களில் இருந்து 60,000 மின்னஞ்சல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று செனட் ஊழியர் கூறினார்.
அந்த ஊழியர் தன் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.
திருடப்பட்ட கணக்குகளில் கிழக்காசியா, பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு கணக்குகள் கூட இல்லை என்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரே ஒரு பக்கத்தில் திருடப்பட்டு இருக்கிறது என்றும் அந்த ஊழியர் பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல் விவரங்கள் மூலம் தெரியவந்தது.
அமெரிக்க அதிகாரிகளும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கடந்த ஜூலை மாதம் ஓர் அறிவிப்பை விடுத்தன.
சீன அரசாங்கம் தொடர்புடைய மோசடிப் பேர்வழிகள் கடந்த மே முதல் அமெரிக்காவின் வர்த்தக, வெளியுறவு அமைச்சுகள் உள்ளிட்ட ஏறக்குறைய 25 நிறுவனங்களின் மின்னஞ்சல் கணக்குகளைச் சட்டவிரோதமாக எட்டி இருக்கிறார்கள் என்று அவை கூறின.
எந்த அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்த மோசடியில் சீனா பின்னணியில் இருக்கிறது என்று அமெரிக்கா புகார் தெரிவிக்கிறது. இதை சீனா மறுத்து வருகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்கெனவே உறவு சரியில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

