நேரம் நெருங்குகிறது; அமெரிக்க அரசு முடங்கும் ஆபத்து

நேரம் நெருங்குகிறது; அமெரிக்க அரசு முடங்கும் ஆபத்து

3 mins read
7c943a9b-f776-4283-a67a-9583acd590ce
அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதில் அதிபர் பையன் கையெழுத்திட வேண்டும். இதற்கு சனிக்கிழமை நள்ளிரவு வரைதான் கால அவகாசம் உள்ளது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் நான்காவது முறையாக பகுதி முடங்கும் ஆபத்து இப்போது தலை எடுத்துள்ளது.

இன்னும் ஒரு சில நாட்கள்தான் உள்ளன. அதற்குள்ளாக அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட வேண்டும். இதற்கு சனிக்கிழமை நள்ளிரவு வரைதான் கால அவகாசம் உள்ளது.

பல்வேறு அமைப்புகளுக்கும் வரும் நவம்பர் வரை நிதி கிடைக்க வகை செய்யும் ஒரு மசோதாவை நாடாளு மன்றத்தின் செனட் சபை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் மக்களவை அதை நிராகரித்துவிட்டது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எல்லாம் நல்லபடி நடக்கவில்லை என்றால் ஆயிரக் கணக்கான மத்திய அரசாங்க ஊழியர்கள் முதல் பொருளியல் புள்ளி விவரங்களை வெளியிடுவது, சத்துணவு சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் இதர ஊழியர்கள் வரை அனைவரும் தற்காலிகமாக விடுப்பில் போக வேண்டிய நிலை ஏற்படும்.

நாடாளுமன்றத்தின் செனட் சபை 77க்கு 19 என்ற கணக்கில் செவ்வாய்க்கிழமை ஒரு மசோதா மீதான விவாதத்தை ஆதரித்தது.

அந்த மசோதா அரசாங்கத்திற்கு வரும் நவம்பர் 17ஆம் தேதி வரை நிதியை ஒதுக்க வகை செய்யும். உள்நாட்டுப் பேரிடர்களைச் சமாளிக்க சுமார் US$6 பில்லியன் (S$8 பில்லியன்), உக்ரேனுக்கு உதவியாக மேலும் US$6 பில்லியன் ஒதுக்கவும் அது வழி செய்கிறது.

ஆனால் அதை குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மக்களவை நிராகரித்துவிட்டது.

மெக்சிகோவுடன் கூடிய எல்லை வழியாக அகதிகள் அதிகம் பேர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.

இந்தப் பிரச்சினையைக் கவனித்தால்தான் மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இது பற்றி கருத்து கூறிய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், அதிபரின் மெக்சிகோ திறந்த எல்லைத் திட்டத்திற்கு ஆதரவாக செனட் சபை இருக்கிறது என்றனர். எல்லை திறந்து இருப்பதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களவையில் 221-212 என்ற அளவுக்குத்தான் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்கு நிதி கிடைப்பதற்கான தங்கள் சொந்த திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

அதற்குப் பதிலாக, ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் முழு நிதி ஆண்டுக்கும் தொடர்ச்சியான பல மசோதாக்களை நிறைவேற்ற அவர்கள் விரும்புகிறார்கள்.

நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியை அவரின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே மிரட்டுகிறார்கள்.

கெவின் மெக்கார்த்தி கடந்த மே மாதம் அதிபர் பைடனுடன், 2024 நிதியாண்டில் US$1.59 டிரில்லியன் விருப்பச் செலவினம் தொடர்பான ஒரு செலவினத் திட்டம் பற்றிப் பேச்சு நடத்தினார். அதை அந்த உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

ஜனநாயக கட்சியினரின் வாக்குகள் தேவைப்படும் செலவின மசோதா எதையாவது நிறைவேற்றினால் கெவின் மெக்கார்த்தியின் பதவி பறிபோய்விடும் என்று அவரின் கட்சியைச் சேர்ந்த் கடும் சித்த உறுப்பினர்கள் சிலர் மிரட்டி உள்ளனர்.

இதனிடையே, அரசாங்க முடக்கத்திற்கான வாய்ப்புகள், மாணவர் கடன் கொடுக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கும்நிலை, அதிக வட்டி விகிதம், மோட்டார் வாகன ஊழியர் வேலை நிறுத்த மிரட்டல் எல்லாம் தலைதூக்குவதால் அமெரிக்கப் பொருளியல் சவால்களை எதிர்நோக்குவதாக வெள்ளை மாளிகை பொருளியல் ஆலோசகர் ஜெராட் பெர்ன்ஸ்டின் புதின்கிழமை பொருளியல் கொள்கைப் பயிலகம் என்ற அமைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்