பொகொட்டா (கொலம்பியா): ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் ஆமை உடலின் எஞ்சிய பகுதிகளின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆமை, கெம்ப்ஸ் ரிட்லி, ஓலிவ் ரிட்லி ரக ஆமைகளுடன் தொடர்புடையது.
இது ஆர் அரிய நிகழ்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ‘ஓஸ்டியோசைட்ஸ்’ என்றழைக்கப்படும் எலும்பு அணுக்கள் அந்த ஆதிகால ஆமையின் உடலில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆமையின் உடல் 2015ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டது.
ஆமையின் பாதி உடல்தான் கண்டெடுக்கப்பட்டது. உயிருடன் இருந்திருந்தால் அது 30 சென்டிமீட்டர் நீளம் இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
பொதுவாக மரபணுக்கள் எளிதில் அழிந்துபோகக்கூடியவை. ஆனால் சரியான சூழலில் அவை பாதுகாப்பாக இருக்கக்கூடும்.
சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகள், செடிகொடிகள் உள்ளிட்டவற்றின் மரபணுக்களை ஆய்வாளர்கள் சென்ற ஆண்டும் கண்டுபிடித்தனர். டென்மார்க்கில் உள்ள கிரீன்லண்ட் வட்டாரத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.