கோலாம்பூர்: தமது அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இப்போதைக்கு அவசரமில்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பிரதமர் அன்வார் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் ஊடகங்களில் வலுவாகப் பரவிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மலேசிய உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சரான சலாஹுடின் அயூப் கடந்த ஜூலை மாதத்தில் மரணமுற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக உள்ளது
“இப்போதைக்கு ஓர் அமைச்சுதான் அமைச்சர் ஒருவர் இல்லாமல் செயல்படுகிறது. காலஞ்சென்ற அமைச்சரின் பணிகளைப் பார்த்துக்கொள்ளுமாறு துணை அமைச்சர்களைப் பணித்துள்ளேன்,” என்று திரு அன்வார் வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றி இன்னும் பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று செம்பம்பர் 27ஆம் தேதி தாம் கூறியதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மற்றோர் அமைச்சரான அர்மிஸான் முகம்மது அலி, காலியாக உள்ள அமைச்சரின் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வருகிறார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
“அரிசி, வெங்காயம் சில அத்தியாவசிய பொருள்களின் விலை குறித்த முக்கியமாக விவகாரங்களில் நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். அந்த அமைச்சு சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது,” என்றும் பிரதமர் அன்வார் விவரித்தார்.
கடந்த ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற திரு அன்வார், நாட்டின் நிதியமைச்சு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

