தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா நம்பிக்கை: கனடா-இந்தியா சேர்ந்து செயல்பட்டு தீர்வு காணும்

2 mins read
87b60de1-310a-4b31-9253-a000f71de08f
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (இடது), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சில் ஊடகத்தைச் சந்தித்தனர்.   - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீக்கிய தீவிரவாதம் தொடர்பில் இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினை காரணமாக அமெரிக்க-இந்திய உறவு பாதிக்கப்படாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோடிகாட்டி இருக்கிறார்.

அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். வாஷிங்டனில் அவர் அமெரிக்கப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

என்றாலும் வெளியில் தெரியாமல் அது பற்றி பேசப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வியாழக்கிழமை இந்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தியாவும் கனடாவும் சேர்ந்து செயல்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று அமெரிக்க அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கனடாவில் ஜூன் 18ஆம் தேதி சீக்கிய தீவிரவாதி கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தெரியவர வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் கோரினார்.

கனடாவில் சீக்கிய தீவிரவாதியும் கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் இந்தியாவுக்குப் பங்கு உண்டு என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருப்பதாக செப்டம்பர் 18ஆம் தேதி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாகக் கூறினார்.

இதையடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் உறவில் பதற்றம் ஏற்பட்டது.

கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.

அமெரிக்காவின் மிக அணுக்கமான நட்பு நாடாக கனடா இருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், கனடா ஆகிய ஐந்து நாடுகளும் சேர்ந்து ‘ஐந்து கண்கள்’ என்ற வேவுத் தகவல் பகிர்வு, கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.

இந்தியாவின் அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் பல தகவல்களைத் தெரிவித்தார்.

இரு தரப்புகளும் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாடு, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றியும் பேச்சு நடத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.

கனடா விவகாரத்தைப் பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

டாக்டர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை ஹுட்சன் பயிலரங்கம் என்ற ஓர் அமைப்பில் நடந்த உரை, விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்காவும் இந்தியாவும் சீக்கிய தீவிரவாதிகள் பிரச்சினை தொடர்பான தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்க வருகை பற்றி கருத்து கூறிய அந்தப் பயிலகத்தின் பாரம்பரிய அறநிறுவனம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆசிய ஆய்வு நிலையத்தின் இயக்குநர் ஜெஃப் ஸ்மித், டாக்டர் ஜெய்சங்கரின் வருகை முதிர்ச்சியின் அடையாளம் என்றும் அமெரிக்க-இந்திய உறவு வளர்வதை அது புலப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்