பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரஜெயா, நெகிரி செம்பிலான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று புகைமூட்டம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.
தலைநகர் கோலாலம்பூரில் புகைமூட்டத்தைக் கணக்கிடும் ஏபிஐ குறியீடு சராசரியாக 154.5ஆகப் பதிவானது. ஆக அதிக பாதிப்புக்கு உள்ளான அந்நகரின் சேராஸ் வட்டாரத்தில் ஏபிஐ குறியீடு 155ஆகப் பதிவானது. பத்து முடாவில் குறியீடு 153ஆக இருந்தது.
சிலாங்கூரின் ஏபிஐ குறியீடு 127.4ஆகவும் பெட்டாலிங் ஜெயாவில் 153ஆகவும் பதிவானது. அதிக பாதிப்புக்கு உள்ளாகாத கிள்ளானில் குறியீடு 88ஆக இருந்தது.
ஏபிஐ குறியீடு 101லிருந்து 200க்குள் பதிவானால் காற்றுத்தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக மலேசியாவின் வானிலை அமைப்பு வகைப்படுத்தும்.
புத்ரஜெயா, தைப்பிங், பேராக், செபாராங் ஜெயா, பினாங்கு ஆகியவற்றிலும் குறியீடு 100ஐத் தாண்டியது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் ஏபிஐ குறியீடு படிப்படியாக அதிகரித்தத் தொடங்கியது.
இந்தோனீசியாவின் சுமத்திரா மாநிலத்தைச் சூழ்ந்துள்ள புகை பலத்த காற்றால் வடமேற்குப் பகுதிக்குத் தள்ளப்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டதாக ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் (ஏஎஸ்எம்சி) தெரிவித்தது.