தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அரசாங்கம் முடக்கம் இல்லை; கடைசி நேரத்தில் தப்பியது

2 mins read
c6f8e689-bb4e-4cab-ba45-ceed40d0c13b
நாடாளுமன்ற மக்களவை நாயகர் கெவின் மெக்கார்தி மக்களவையில் மசோதா நிறைவேற ஆதரவு அளித்தார். - படம்: ஏஎஃப்பி 

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றம் சனிக்கிழமை கடைசி நேரத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதனால் மத்திய அரசு அமைப்புகள் மேலும் 45 நாள்களுக்குத் தொடர்ந்து செயல்படக்கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கடைசி நேரத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்க அரசாங்கம் முடங்கும் நிலை தவிர்க்கப்பட்டது.

இருந்தாலும்கூட உக்ரேனுக்கு உதவும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேறவில்லை.

சனிக்கிழமை நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த மசோதாவை செனட் சபை ஏற்கெனவே நிறைவேற்றி இருந்தது.

மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவை நிராகரித்து இருந்தால் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.

ராணுவ நடவடிக்கைகள் முதல் உணவு உதவி, மத்திய கொள்கை உருவாக்கங்கள் வரையிலான அரசாங்கப் பணிகள் பலவும் பாதிக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் நல்ல வேளையாக மசோதா கடைசி நேரத்தில் நிறைவேறிவிட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மசோதா நிறைவேறி இருப்பதை அடுத்து தேவையில்லாத ஒரு நெருக்கடி தவிர்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

மசோதா நிறைவேறவில்லை என்றால் மில்லியன் கணக்கான கடும் உழைப்பு அமெரிக்கர்கள் தேவையில்லாமல் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் வெள்ளை மாளிகையுடன் இணக்கம் காணப்பட்ட செலவின அளவை நிராகரித்துவிட்டதற்காக மக்களவையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களையும் சபாநாயகர் மெக்கார்தியையும் அதிபர் குறைகூறினார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த 21 கடும்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு பிரச்சினைகளைக் கிளப்பியதால் அமெரிக்க அரசாங்கம் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்