தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொதிக்கும் ஆஸ்திரேலியா: காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க பல்லாயிரம் பேர் ஓட்டம்

2 mins read
97aeed8c-bf57-45f5-aa1d-dbe0dc2dbe98
இனி வரும் நாள்களில் ஆஸ்திரேலிய நகரங்களில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை முன்னுரைப்பு தெரிவிக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: தென்கிழக்கு ஆஸ்திரேலிய வட்டாரத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.

குறிப்பாக, விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பர்னின் கிழக்கே கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஜிப்ஸ்லேண்ட் வட்டாரத்தின் நான்கு நகரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த வட்டாரத்தைச் சுற்றியுள்ள இதர பகுதிகளில் இருந்தும் மேலும் மூன்று நகரங்களில் இருந்தும் எந்நேரமும் வெளியேறத் தயாராக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதேநேரம் பிரையாகோலாங் நகரில் இருந்து உரிய நேரத்தில் வெளியேறிய ராப் சாண்டர்ஸ் என்பவர் தமது வீடு தீக்கிரையானதை தமது கண்களால் கண்டதாகக் கூறினார்.

“என் வீட்டில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டியும் பிளாஸ்டிக் தொட்டிகளும் தீயில் உருகி ஓடுவதைப் பார்த்தேன்,” என்று அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசியிடம் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நியூ சௌத் வேல்சின் பெரிய நிலப்பரப்பில் வசிப்போர் தீ மூட்டும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இனி வரும் நாள்களில் அதிக வெப்பம் நிலவும் என்று நாட்டின் வானிலை முன்னுரைப்பு தெரிவித்து உள்ளது.

சில வட்டாரங்களில் தற்போது இருப்பதைக் காட்டிலும் சராசரியாக 12 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல. நியூ சௌத் வேல்சின் தலைநகரான சிட்னியில் வரும் நாள்களில் 36 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை முன்னுரைப்பு தெரிவிக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால் 2019 அக்டோபருக்குப் பிறகு அதிக வெப்பம் நிறைந்த அக்டோபராக இம்மாதம் இருக்கும்.

இந்நகரின் உச்சக்கட்ட வெப்பம் 2004ஆம் ஆண்டு 38.2 டிகிரியாக பதிவானது.

குறிப்புச் சொற்கள்