கடித்தது உடும்பு அல்ல, முதலைக் குட்டி

கடித்தது உடும்பு அல்ல, முதலைக் குட்டி

படம்: MELAKA HARI INI / ஃபேஸ்புக்

02 Oct 2023 - 2:29 pm

1 mins read

மலாக்கா: மலேசியாவில் தன்னை உடும்பு ஒன்று கடித்ததாக ஒரு பெண் நினைத்துக்கொண்டிருந்தார். பிறகுதான் கடித்தது உடும்பு அல்ல, முதலைக் குட்டி என்பதை அவர் உணர்ந்தார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்தது.

65 வயது ஃபாரிடா அப்துல் கானி என்ற மாது காலை ஆறு மணியளவில் மலாக்காவின் பாலிக் பத்து பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரின் இடது காலை ஏதோ கடித்தது.

“அப்போது இருட்டாக இருந்தது. என்னைக் கடித்தது உடும்பு என்று நினைத்தேன். எனது குடும்பத்தாரை உதவிக்காக அழைத்தேன். எனது மகன் அருகே சென்று பார்த்தபோது அந்த விலங்கு ஒரு முதலை என்பதை உணர்ந்தார்,” என்று திருவாட்டி ஃபாரிடா மலாய் நாளிதழான ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார்.

“உடும்பாக இருந்திருந்தால் அது ஓடியிருக்கும். ஆனால் அந்த முதலை வாயைத் திறந்துகொண்டே ஒரே இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு எனது மகன் அதை உணவுப் பாத்திர மூடியால் பிடித்தார்,” என்றார் அவர். உடனடியாக அதிகாரிகளை அழைத்தாகவும் சொன்னார்.

உடனடியாக முதலை எடுத்துச் செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியா