தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் மோட்டார் சைக்கிள்ஓட்டியைத் தாக்கிய மூவர் கைது

1 mins read
ee70797a-2443-44b8-8f51-d53b424a19d7
மோட்டார் சைக்கிள் ஓட்டியை காரில் வந்தவர்கள் முகத்திலும் வயிற்றிலும் குத்தியிருக்கின்றனர். - படம்: ஸாக் ஹெல்மி/ ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டியைத் தாக்கிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.

சிலாங்கூரில் கிள்ளான் துறைமுகத்துக்கு அருகேயுள்ள சாலைச் சந்திப்பில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதும் அளவுக்கு புரோட்டான் கார் அஜாக்கிரதையாக சென்றது. மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒலியெழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டியைத் தடுத்து நிறுத்தி நகர விடாமல் செய்துள்ளனர் என்று தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சா ஹுங் ஃபோங் தெரிவித்துள்ளார்.

காரில் சென்ற இரண்டு பயணிகளில் ஒருவர், மோட்டார் சைக்கிள் கீழே விழும் வரை தள்ளினார். மோட்டார் சைக்கிள் ஓட்டியை அவர் எட்டி உதைத்து, குத்தி, கழுத்தை நெரித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வலியால் துடித்தது மட்டுமல்லாமல் அவரின் உதடு, மார்பு, கால்கள் வீங்கிவிட்டன.

பொதுமக்களில் சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் புறப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் யமஹா மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தனர்.

இந்தச் சம்பவத்தை விசாரித்த காவல்துறை 28 முதல் 39 வயது வரையிலான மூவரை ஞாயிற்றுக் கிழமை மாலை கைது செய்தது.

மூவர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பதாக திரு சா கூறினார்.

சிறுநீர் பரிசோதனையில் 39 வயது முக்கிய சந்தேக நபர் ‘மெத்தாம்பீட்டமைன்’ என்ற போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்