அரிசியைப் பதுக்கினால்... அன்வார் எச்சரிக்கை

1 mins read
f7e1f52a-40e0-408b-8173-cc98c1ec914f
அரிசி பதுக்குபவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அரிசியைப் பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மலேசியாவில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை உயரும் என பலரும் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்துக்கு இடையே அரிசியை சிலர் பதுக்கி வருகின்றனர். ஒரு சிலர் அரிசியை முன்கூட்டியே வாங்கி வைக்க முற்படுகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் அன்வாரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மலேசிய நாட்டின் அரிசி தேவையில் ஏறக்குறைய 38 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

“அரிசி கிடைக்க மக்கள் அல்லாடும்போது யாராவது அரிசியைப் பதுக்கினால் நாங்கள் கண்டுபிடித்து வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று பிரதமர் அன்வார் திங்கள்கிழமை பின்னேரத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே அரிசி பதுக்குவோரைக் கண்காணித்து அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அரிசியின் விலைக்கு அரசாங்கம் வரம்பு விதித்துள்ளது. அதனால் உள்ளூர் அரிசி விலையேற வாய்ப்பில்லை.

இந்நிலையில் அரிசி விலை உயர்வைத் தடுப்பதற்காக சாபா, சரவாக் மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் அரிசிக்கு 950 ரிங்கிட் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்