தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆக மோசமான அனுபவம்’: பேங்காக் துப்பாக்கிச்சூடு குறித்து ஜோகூர் பட்டத்து இளவரசர்

2 mins read
8753a6da-eddf-42b0-ae8e-57403275e282
சியாம் பேரகான் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்படும் ஆம்புலன்ஸ். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு அருகிலிருந்த ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்ததற்காக சிங்கப்பூருக்கு அவர் நன்றி கூறினார்.

ஃபேஸ்புக், எக்ஸ் சமூக வலைத்தளங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பதிவு ஒன்றை திரு இஸ்மாயில் வெளியிட்டார். சியாம் பேரகான் கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ஹோட்டல் வரவேற்பறையில் தாமும் தம் குடும்பத்தாரும் அமர்ந்திருந்தபோது மக்கள் அலறியடித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்ததாக அவர் கூறினார்.

தாமும் தம் குடும்பத்தாரும் தங்களது பாதுகாப்புக் குழுவினருடன் சேர்ந்து ஹோட்டலின் கீழ்த்தளத்திற்கு உடனடியாக ஓடியதாக திரு இஸ்மாயில் சொன்னார். தாங்கள் இருந்த ஹோட்டலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

“விழிப்புடன் இருந்து, எந்தவொரு சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டியிருந்தது. அந்தத் தருணத்தில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது மட்டுமே எங்களுக்குத் தெரியும். வேறெந்த தகவலும் எங்களிடம் இல்லை,” என்றார் அவர்.

“என் பிள்ளைகளிடம் நான் பேசுவதைக் காட்டும் படங்கள் என்னிடம் இன்னும் உள்ளன. ‘எல்லாம் சரியாகிவிடும். அப்பாவும் அம்மாவும் இங்கு உள்ளனர்’,” என்று திரு இஸ்மாயில் சொன்னார்.

கார் வரும் வரை கீழே குனிந்து இருக்கும்படி, இரண்டு வயதுக்கும் ஏழு வயதுக்கும் இடைப்பட்ட தம் நான்கு பிள்ளைகளிடம் அவர் கூறினார்.

அதேவேளையில், குடும்பத்தாரைப் பாதுகாக்க திரு இஸ்மாயிலும் அவருடைய பாதுகாப்புக் குழுவினரும் சேர்ந்து மனிதக் கவசத்தை அமைத்தனர்.

தம் குடும்பத்தாரும் பாதுகாப்புக் குழுவினரும் பாதுகாப்பாக வெளியேறினால் போதும் என்றார் திரு இஸ்மாயில்.

இதற்கிடையே, அழுதுகொண்டிருந்த தம் பிள்ளைகளைக் கட்டியணைத்து அவர்களை அமைதியடையச் செய்தார் திரு இஸ்மாயிலின் மனைவி கலீடா.

கார் வந்தவுடன், மலேசியத் தூதரகத்துக்கு தங்களை அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் திரு இஸ்மாயில் கூறினார். ஆனால், சிங்கப்பூர் தூதரகம் அருகில் இருப்பதாக ஓட்டுநர் சொன்னார்.

அப்போதுதான், ஜோகூரில் உள்ள சிங்கப்பூரின் துணைத் தூதரக அதிகாரி ஜீவன் சிங்கை திரு இஸ்மாயில் தொடர்புகொண்டார்.

“தூதரகத்தில் இப்போது நாங்கள் பத்திரமாக உள்ளோம்,” என்று குறிப்பிட்ட திரு இஸ்மாயில், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் தற்காப்பு அமைச்சர் முகம்மது ஹசனையும் தொடர்புகொண்டு நிலவரத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகச் சொன்னார்.

தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் ஜோஜி சேமுவல் திரு இஸ்மாயிலை பின்னர் சந்தித்தார்.

சியாம் பேரகான் கடைத்தொகுதியில் வெளிநாட்டவர் இருவரைச் சுட்டுக்கொன்று ஐவரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பதின்மவயது துப்பாக்கிக்காரன் ஒருவனை தாய்லாந்துக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்