தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு

1 mins read
bfdcd298-af9e-4714-b116-c6d0d76882a8
மாண்டவர்களில் உக்ரேனியர் ஐவரும் ஜெர்மானியர் ஒருவரும் அடங்குவர். - படம்: இபிஏ

வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரில் மேம்பாலச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இவ்விபத்து செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்தது என்றும் இதில் நான்கு குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெனிஸ் நகரை மெஸ்டிரி வட்டாரத்துடன் இணைக்கும் பாலத்தின் கீழே இருக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.

மாண்டவர்களில் உக்ரேனியர் ஐவர், ஜெர்மானியர் ஒருவர், அப்பேருந்தை ஓட்டிய இத்தாலியர் உள்ளிட்டோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்விபத்தில் 18 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் மட்டயோ பியான்டெடோசி கூறினார்.

அருகில் உள்ள மர்கேரா வட்டாரத்தில் உள்ள ஓர் உல்லாச முகாமுக்கு சுற்றுலாப் பயணிகளை அந்தப் பேருந்து ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகின்றது. அப்பேருந்து கிட்டத்தட்ட 50 அடிப் பள்ளத்தில் விழுந்ததாக அவசரகாலச் சேவை நிலையங்கள் குறிப்பிட்டன.

மீத்தேன் வாயுவால் அப்பேருந்து இயக்கப்பட்டது. அதனால், மின்கம்பிகளின் மேல் பேருந்து விழுந்ததும் தீப்பற்றியதாகச் சொல்லப்பட்டது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதலும் ஆலோசனையும் வழங்கிட உளவியலாளர்களும் மனநல நிபுணர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

குறிப்புச் சொற்கள்