ஜோகூர் பாருவில் போக்குவரத்து நெரிசல் படுமோசம்; மேயர் குமுறல்

1 mins read
fec68c23-793d-4610-bf08-a979b5dbab51
ஜோகூர் பாருவில் நிலவும் நெரிசலுக்கு சாலைப் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளுமே காரணங்கள் எனக் கூறப்படுகிறது. - படம்: தி ஸ்டார்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் நிலவிவரும் மோசமான போக்குவரத்து நெரிசல், அதன் மேயர் முகம்மது நூரஸாம் ஓஸ்மானைச் சினமடையச் செய்துள்ளது.

அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமடைந்துள்ளது குறித்து வாகனமோட்டிகளிடம் இருந்து ஜோகூர் பாரு நகர மன்றத்துக்கு நிறைய புகார்கள் கிடைத்துள்ளதை அவர் சுட்டினார்.

“வாகனமோட்டிகள் மட்டுமல்ல. தொடர்ந்து மோசமடைந்துவரும் போக்குவரத்து நெரிசல் குறித்து நானும் விரக்தி அடைந்துள்ளேன்,” என்றார் அவர்.

ஜோகூர் பாருவின் பல இடங்களிலும் நிலவும் நெரிசலுக்கு சாலைப் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளுமே காரணங்கள் என்று திரு நூரஸாம் விளக்கினார்.

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மற்றொரு காரணம் என்றார் அவர்.

“நெரிசலைக் குறைக்க, மேம்பட்ட போக்குவரத்து நிர்வாக முறை தேவை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனான சந்திப்பின்போது நான் கருத்துரைத்தேன்,” என்று அவர் கூறினார்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் லிங்க்கிற்கு துணைபோகும் ஆக்ககரமான பொதுப் போக்குவரத்து முறையைக் கொண்டிருப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றார் அவர்.

ஜோகூர் பாருவையும் அருகிலுள்ள இதர மாவட்டங்களான குலாய், பாசிர் குடாங்கையும் இணைக்க இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) முறை, மாநில அரசு மற்றும் கூட்டரசு கருத்தில்கொள்ள வேண்டிய பொதுப் போக்குவரத்து முறையில் ஒன்று என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்