ஐரோப்பா, ஆசியா வர்த்தக இணைப்பு: ஐக்கிய அரபு சிற்றரசுகளும் துருக்கியும் ரயில் பாதைகள் குறித்து பேச்சுவார்த்தை

2 mins read
6c799dd2-2be5-45dd-9ca3-0c7d15cb83b4
யாவுஸ் சுல்தான் செலிம் என்ற உலகின் மிகநீளமும் அகலமுமான தொங்கும் பாலங்களில் ஒன்றைக் கடந்து இந்த ரயில் பாதை செல்லும். - படம்: கூகல் வரைபடம்

அங்காரா: ஐரோப்பாவையும் ஆசியாவையும் வர்த்தகத்தால் இணைக்கும் திட்டம் அங்குள்ள நாடுகளுக்கு இடையில் போட்டியை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசுகள், துருக்கி ஆகிய இருநாடுகளும் ரயில் பாதை ஒன்றை கட்டமைக்கும் திட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றன.

யாவுஸ் சுல்தான் செலிம் என்ற உலகின் மிகநீளமும் அகலமுமான தொங்கும் பாலங்களில் ஒன்றைக் கடந்து இந்த ரயில் பாதை செல்லும். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் இந்தப் பாலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் துருக்கிய அதிபர் எர்டொகன் ஆட்சியில் கட்டப்பட்டது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தலைநகரான அபு தாபியில் இயங்கும் ஏடிகே நிதியகம் துருக்கியுடன் கூட்டுச் சேர்ந்து, இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் நீரிணைக்கு மேல் ஒரு ரயில் தடத்தை அமைக்கத் திட்டமிடுகின்றன. இது ஐரோப்பாவை மத்திய கிழக்குடனும் ஆசியாவுடனும் வர்த்தகத்தால் ஒன்றிணைக்கும் பெரும் திட்டத்தின் அங்கமாகும்.

இத்திட்டத்தைப்போன்று துருக்கியும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் பற்பல ஒப்பந்தங்களை அண்மையில் செய்துள்ளன. பல ஆண்டுகளாக நிலவிய பகையைக் கைவிட்ட பிறகு, கடந்த ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகள், பொருளாதார பின்னடைவில் இருக்கும் துருக்கிக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலரை முன்மொழிந்தது.

வரப்போகும் 2030ம் ஆண்டுக்குள், எரிசக்தி, தளவாடம், சுற்றுலா, விவசாயம் ஆகிய முக்கியத் துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையே வர்த்தக முதலீடுகள் ஏற்படப்போகின்றன. அதன் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடுவே இருக்கும் துருக்கி, கருங்கடலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் லண்டனுக்கும் சீனாவுக்குமான வர்த்தக இணைப்பையும் தனக்குச் சாதகமாக அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறது. அதன் அங்கம்தான் ரயில் தடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களை துருக்கி முன்னெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்