தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யாவையும் இந்தியாவையும் பிரிக்கும் முயற்சி பலிக்காது: புட்டின்

2 mins read
75ae5001-e430-4ebd-8e9b-f2821318f4fb
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவுக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை என்று ரஷ்ய அதிபர் புட்டின் (இடது) குரல் கொடுத்து உள்ளார். - படம்: இந்திய ஊடகம்

சூச்சி: இந்திய அரசாங்கம் தன்னுடைய குடிமக்களின் நலன்களை உத்தேசித்து சுதந்திரமாகச் செயல்படுகிறது.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவை உருவாக்க மேற்கத்தியம் முயன்றால் அதனால் எந்தப் பயனும் இராது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்து உள்ளார்.

“மேற்கத்தியம் தங்கள் ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் பிரச்சினையை உருவாக்கி விரோதத்தை வளர்க்கிறது.

“ஒவ்வொரு நாட்டையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

“இருந்தாலும் இந்தியத் தலைமைத்துவம் தன் நாட்டு நலன்களைப் பொறுத்தவரை சுதந்திரமாகவே நடந்துகொள்கிறது,” என்று ரஷ்ய அதிபர் குறிப்பிட்டார்.

திரு புட்டின், ரஷ்யாவின் கருங்கடல் பொழுதுபோக்கு நகரான சூச்சியில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

“ரஷ்யாவையும் இந்தியாவையும் பிரித்துவிட இடம்பெறும் முயற்சியால் எந்தப் புண்ணியமும் இருக்காது. இந்தியா சுதந்திர நாடு,” என்று அவர் தெரிவித்தார்.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து ரஷ்யா மீது மேற்கத்தியம் பல தடைகளை விதித்தது.

அதனை அடுத்து இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய்யைக் கொள்முதல் செய்து வருகின்றன.

இதனால் இந்தியாவின் அந்த நிறுவனங்கள் குறைகூறல்களுக்கு ஆளாகின்றன.

இந்தச் சூழலில் ரஷ்ய அதிபரின் கருத்து வெளியாகி உள்ளது.

திரு மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இந்தியா மேலும் மேலும் வலுவாக வளர்ந்து வருகிறது என்று இந்தியப் பிரதமரை ரஷ்ய அதிபர் பாராட்டினார்.

“இந்தியாவில் 1.4 பில்லியனுக்கும் அதிக மக்கள் வசிக்கிறார்கள். அது 7%க்கும் அதிக பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்கிறது.

“இந்தியா சக்திமிக்க நாடு. திரு மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இந்தியா மேலும் வலுவடைந்து வருகிறது.

“ரஷ்யாவைப் போலவே இந்தியாவுக்கும் எல்லை இல்லை. இந்தியர்கள் உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும் முதிரைப் பதித்து வருகிறார்கள்,” என்று திரு புட்டின் புகழாரம் சூட்டினார்.

உக்ரேன் மீது ரஷ்யா 2022 பிப்ரவரியில் போர் தொடுத்து ஆக்கிரமித்தது.

அதை அடுத்து ரஷ்யாவை மேற்கு நாடுகளுடன் இதர பல நாடுகளும் ஓரங்கட்டிவிட்டன.

அதிபர் புட்டின் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்திலும் புதுடெல்லியில் நடந்த ஜி20 கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

அரசியல் ரீதியில் பிரச்சினைகளை எழுப்ப தான் விரும்பவில்லை என்றும் அதனால்தான் அந்தக் கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் அதிபர் புட்டின் காரணம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்