பிலிப்பீன்ஸ்: வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உயர் விழிப்புநிலையில் 42 விமான நிலையங்கள்

பிலிப்பீன்ஸ்: வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உயர் விழிப்புநிலையில் 42 விமான நிலையங்கள்

1 mins read
11f1d28f-dab3-4034-9e59-05585350f2c7
மணிலாவிலிருந்து டாவோ, பிகால், பலாவான், சிபு ஆகியவற்றுக்குச் செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பிலிப்பீன்ஸ் அரசாங்கம், நாட்டின் 42 விமான நிலையங்களுக்கு உயர் விழிப்பு நிலையைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

பிலிப்பீன்சின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (அக். 6) இத்தகவலை வெளியிட்டது.

தலைநகர் மணிலாவிலிருந்து டாவோ, பிகால், பலாவான், சிபு ஆகியவற்றுக்குச் செல்லும் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

மிரட்டல் குறித்து மதிப்பிடப்படும் வேளையில், அனைத்து விமான நிலையங்களிலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக நடப்புக்கு வந்ததாக ஆணையம் கூறியது.

மிரட்டல் எப்போது விடுக்கப்பட்டது என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.

அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்தும்படியும் பயணப்பைகளை முழுமையாகச் சோதிக்கும்படியும் 24 மணி நேரமும் விமான நிலையத்தைக் கண்காணிக்கும்படியும் விமான நிலையப் பாதுகாப்பு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணையம் சொல்லிற்று.

மணிலா அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்து முனையங்களிலும் சுற்றுக்காவல் படையினருடன் ‘கே9’ பிரிவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிலிப்பீன்சின் போக்குவரத்து அமைச்சர் ஜெய்மி பௌடிஸ்டா கூறியுள்ளார்.

அமலாக்க அதிகாரிகள் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

விமானச் சேவைகள் திட்டமிட்டபடி இயங்கி வருவதாகவும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பயணிகளுக்கு அமைச்சர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்