வாஷிங்டன்: அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் மாதத்தில் சான் ஃபிரான்சிஸ்கோவில் சந்திக்க நேரிடலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும், அது குறித்த எந்த ஏற்பாடும் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இரு வல்லரசுகளின் தலைவர்களும் கடந்த ஓராண்டாக நேரடியாகச் சந்தித்துக்கொள்ளவில்லை.
“இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக்கு இதுவரை ஏந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இருப்பினும், அத்தகைய சந்திப்பு சாத்தியமாகலாம்,” என்று திரு பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 16ஆம், 17ஆம் தேதிகளில் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டில் அவர்கள் சந்திக்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அமெரிக்க அதிபர் இவ்வாறு பதிலளித்தார்.
ஏபெக் உச்சநிலை மாநாட்டில் இருநாட்டு அதிபர்களும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை தொடங்கிவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஏபெக் மாநாட்டுக்கு முன்னதாக வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.