ஆசியான் இணக்கம்: அரிசி பற்றாக்குறை வந்தால் உறுப்பு நாடுகளுக்கு முன்னுரிமை

ஆசியான் இணக்கம்: அரிசி பற்றாக்குறை வந்தால் உறுப்பு நாடுகளுக்கு முன்னுரிமை

2 mins read
336502d1-99f7-4b2e-ad32-80903d838789
அரிசி தேவை என்று புதிதாக கோரிக்கை வந்தால் அது பற்றி தாங்கள் பரிசீலிக்கப்போவதாக வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து நாடுகள் தெரிவித்தன. - படம்: ராய்ட்டர்ஸ் 

கோலாலம்பூர்: அரிசி பற்றாக்குறையையும் உணவு தொடர்பான இதர பிரச்சினைகளையும் சமாளிக்க ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளப்போவதாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தெரிவித்து உள்ளன.

இதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக அவை இணங்கி இருக்கின்றன.

மலேசியாவின் வேளாண் துறை அமைச்சர் இவ்வாறு கூறியதாக அந்த நாட்டின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த வாரம் ஒரு கூட்டம் நடந்தது. அதில் ஆசியான் இந்த இணக்கத்தைக் கண்டது என்று மலேசியாவின் வேளாண்மை, உணவு உத்தரவாதத் துறை அமைச்சர் முகம்மது சாபு வெள்ளிக்கிழமை கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அரிசி பற்றாக்குறை பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால் ஆசியான் நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதே இந்த இணக்கத்திற்கான பொருள் என்று அவர் விளக்கினார்.

இதனிடையே, அரிசி தேவை என்று புதிதாக கோரிக்கை வந்தால் அது பற்றி தாங்கள் பரிசீலிக்கப்போவதாக வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து நாடுகள் தெரிவித்தன.

மலேசியா தனக்குத் தேவைப்படும் அரிசியில் சுமார் 38 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. உலகில் அரிசியை ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் இந்தியா அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்து இருக்கிறது.

அதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அத்தகைய நாடுகளில் மலேசியாவும் ஒன்று.

மலேசியாவில் அரிசி விலை உயர்கிறது. இதை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மானியங்களையும் இதர நடவடிக்கைகளையும் திங்கள்கிழமை அறிவித்தது.

சந்தையில் போதிய அளவுக்கு அரிசி இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அது தெரிவித்தது.

அரிசியை யாராவது பதுக்கினால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்