ஜோகூர் பாரு: பொழுது விடியும் முன்பே எழுந்து, பரபரப்புடன் சிங்கப்பூருக்கு வேலை செய்ய விரைந்து வரும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மாலையில் வீடு திரும்பும்போது மீண்டும் ஒரு தடங்கலை எதிர்கொள்கிறார்கள்.
மூன்று பூப்பந்து மைதான அளவில் கட்டணமற்ற தற்காலிக மோட்டார் சைக்கிள் நிறுத்தம் ஒன்று மலேசியர்களுக்கென சுங்கத்துறை குடிநுழைவு நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் அங்கிருந்து வண்டிகளைப் பிரச்சினையின்றி ஓட்டிச் செல்வது பெரும் சவாலாக அமைந்துவிட்டது.
குறைந்தது 1,000 மோட்டார்சைக்கிள்கள் அந்த நிறுத்தத்தில் உள்ள நிலையில், ஒன்றை ஒன்று உரசாமலும் மோதாமலும் ஓட்டுநர்கள் அங்கிருந்து வெளிவர வேண்டும்.
அதிகாலையில் அங்கு மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக நிறுத்தப்படுவதில்லை. மாலை வேளையில்தான் இந்தப் பெரும் பிரச்சினை ஏற்படுகின்றது.