மூட்டைப்பூச்சி தொல்லையால்பாரிசில் ஏழு பள்ளிகள் மூடல்

மூட்டைப்பூச்சி தொல்லையால்பாரிசில் ஏழு பள்ளிகள் மூடல்

1 mins read
42b70a22-2b3e-4548-b81a-fa0da222d835
பாரிசில் அடுக்குமாடி வீடு ஒன்றில் முகக்கவசம் அணிந்த ஊழியர் ஒருவர் மூட்டைப் பூச்சி மருந்து அடிக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ் 

பாரிஸ்: பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினை காரணமாக ஏழு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மூட்டைப் பூச்சிதொல்லை அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அது பற்றி விவாதிக்கிறது.

பிரான்சின் கல்வி அமைச்சு இதனை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரான்சில் பள்ளிக்கூடங்களில் மூட்டைப்பூச்சி தொல்லை பெரும் பிரச்சினையாகிவிட்டது.

17 பள்ளிக்கூடங்களில் அந்தத் தொல்லை தாங்கமுடியவில்லை.

சுத்தப்படுத்துவதற்காக ஏழு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் பிரான்ஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இருந்தாலும், பாரிஸ் போக்குவரத்துச் சேவைகளில் மூட்டைப்பூச்சி தொல்லை இருப்பதாகக் கூறப்படுவதை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மூட்டைப்பூச்சி பிரச்சினை பற்றி அதிக புகார்கள் தெரிவிக்கப்படுவதால் அது பற்றி விவாதிப்பதற்காக இந்த வாரத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக பல கூட்டங்களை நடத்தி இருக்கிறது.

பிரான்ஸ் ரக்பி உலகக் கிண்ணப் போட்டியை நடத்துகிறது. அடுத்த அண்டு பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அந்த நாட்டில் மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைதூக்கி இருக்கிறது.

பிரான்சில் 60,000க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இருக்கின்றன. ஒரு சில கல்வி நிலையங்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் புகார்கள் அதிகரித்து வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.

மூட்டைப்பூச்சி தொல்லையைப் பொறுத்தவரை உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரான்சைப் பொறுத்தவரை 10ல் ஒரு குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக மூட்டைப்பூச்சி தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்திருப்பதாகத் தெரியவருகிறது.

குறிப்புச் சொற்கள்