தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல்; 40 பேர் பலி; இஸ்ரேல் போர் பிரகடனம்

3 mins read
6281135f-659b-4edd-8417-90fa89aefb2b
காஸாவில் தீப்பற்றி எரியும் இஸ்ரேலிய வாகனத்துக்குப் பக்கத்தில் ஓடும் பாலஸ்தீனச் சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

காஸா: பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, காஸா பகுதியில் இருந்து திடீரென 5,000 எறிபடைகளை இஸ்ரேலுக்குள் பாய்ச்சி தாக்குதல் நடத்தியதாகவும் அதைச் சாக்காக வைத்து டஜன் கணக்கான தீவிரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் புகுந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஹமாஸ் நடத்திய அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் தாக்குதலில் சுமார் 545 இஸ்ரேலியர்கள் காயமடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் சுகாதார அமைச்சு கூறியது.

தெற்கு இஸ்ரேலில் செயல்பட்டு வந்த வட்டார மன்றம் ஒன்றின் தலைவரான ஓஃபிர் லெப்ஸ்டெய்ன் என்பவர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது.

இஸ்ரேலியர்கள் பலரும் பிணையாகப் பிடிக்கப்பட்டு காஸா பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளும் கண்டித்துள்ளன.

ஹமாஸ் அமைப்பு பல ஆண்டுகளாக இந்த அளவுக்கு ஆகப் பெரிய தாக்குதலை நடத்தியதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த அமைப்பு அலை அலையாக எறிபடைகளைப் பாய்ச்சி தாக்குதலை நடத்தியதை அடுத்து எல்லைப் பகுதிக்கு ஏராளமான வீரர்களை உடனடியாக இஸ்ரேல் அனுப்பி வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

தெற்கு இஸ்ரேலில் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் போர் ஆயத்தப் பிரகடனம் செய்து இருக்கிறது என்று அந்த நாட்டின் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.

அதற்குப் பிறகு இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு ஓர் அறிவிப்பு விடுத்தார். இஸ்ரேல் போர்க் களத்தில் குதித்து இருக்கிறது என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ஹமாஸ் அமைப்பிற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் சூளுரைத்தார்.

ஹமாஸ் இயக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் சேர்ந்துகொள்ளும்படி சேமப் படையினருக்கு அழைப்பு விடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் திரட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னதாக ஏராளமான எறிபடைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்தன. அதன் விளைவாக இஸ்ரேலில் போர் அபாயச் சங்கு ஒலித்தது.

பதிலடியாக இஸ்ரேலும் காஸா பகுதியில் பல்வேறு நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தானே பொறுப்பு என்று பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் பொறுப்பேற்றுக் கொண்டது.

20 நிமிடங்களில் 5,000 எறிபடைகளைப் பாய்ச்சியதாகவும் அது தெரிவித்தது.

காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியப் பகுதிக்குள் பெரிய அளவில் எறிபடைகளைப் பாய்ச்சி தாக்கியதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்தது.

பல்வேறு திசைகளில் இருந்தும் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும் அது அறிக்கை ஒன்றில் கூறியது.

இஸ்ரேலிய பொதுப் படைத் தலைமைத் தளபதி சூழ்நிலையை மதிப்பிட்டு வருகிறார் என்றும் ஹமாஸ் அமைப்புக்குச் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

முன்னதாக, காஸா பகுதியைச் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருந்துகொள்ளும்படி வலியுறுத்தப்பட்டனர்.

அதேபோல, இஸ்ரேலின் தெற்கு, மத்திய பகுதிகளில் வசிப்போருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஷ்கெலோன் என்ற நகரில் பல இடங்களும் தீப்பிடித்து எரிந்ததையும் தீயணைப்பாளர்கள் அதை அணைத்ததையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன படங்கள் காட்டின.

பல வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால் கரும் புகை கிளம்பியது.

குறிப்புச் சொற்கள்