காட்டுத் தீயை உடனே அணைக்க இந்தோனீசியா உத்தரவு

2 mins read
441ee252-0a70-4c07-bc19-d9a6916fb5d6
இந்தோனீசியாவில் எரியும் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட பக்கத்து நாடுகளில் தூசு மூட்டம் ஏற்பட்டு காற்றுத் தரம் பாதிக்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் காட்டுப் பகுதிகளிலும் கட்டாந்தரைப் பகுதிகளிலும் தீ காரணமாக ஏற்படக்கூடிய தூசு மூட்டம் வேகமாக பல இடங்களுக்கும் பரவிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்து இருக்கிறார்.

ஆகையால் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தீயை அணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உடனடியாக செயல்பட்டு அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி ராணுவ, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் வட்டார அரசாங்கத்திற்கும் அதிபர் உத்தரவிட்டார்.

தீ காரணமாக மூளும் புகை, காற்று அடிக்கும்போது வேகமாக பல திசைகளிலும் பல இடங்களுக்கும் சரசரவென பரவிவிடும் என்று அவர் கூறினார்.

சிறு தீயாக இருந்தாலும் அதை முற்றிலும் உடனடியாக அணைத்துவிட வேண்டும். இல்லையேல் ஆபத்து என்று அவர் எச்சரித்தார்.

இந்தோனீசியாவின் சுமத்ரா, களிமந்தானில் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளின் காற்றுத் தரம் கெட்டுப்போய் இருக்கிறது. அந்த நாடுகளில் தூசு மூட்டம் அதிகமாகி வருகிறது.

அது பற்றி கருத்து தெரிவித்த அதிபர், தமது நாட்டில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறது என்றார்.

வறண்ட பருவநிலை நீடிக்கும் போல் தெரிகிறது என்று அவர் கூறினார்.

அத்தகைய நிலை நீடித்தால் நாட்டின் பல பகுதிகளில் மரம் செடி கொடி புல் பூண்டுகள் எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று அதிபர் கூறினார்.

இருந்தாலும் தீயைக் கட்டுப்படுத்த இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் 2015ல் காட்டுத் தீ மூண்டபோது எடுக்கப்பட்டவற்றைவிட சிறப்பாக இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.

தீயை எப்படியும் கட்டுப்படுத்தி விடலாம் என்று அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் ஆகஸ்டில் தொடங்கிய வறட்சிக் காலம் இந்த மாதம் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவா உள்ளிட்ட பல வட்டாரங்களில் போதிய மழை இல்லை.

குறிப்புச் சொற்கள்