ஹெராட்: மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நிகழ்ந்த 6.3 ரிக்டர் அளவுள்ள இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 9,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர் என்று தலிபான் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிலநடுக்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை 500ஆக அதிகரித்தது என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அங்கு கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
நிலநடுக்கம் தாக்கப்பட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளதால் அதற்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் பேச்சாளர் முல்லா ஜான் சாயேக் தெரிவித்தார்.
இவ்வட்டாரத்தின் மிகப்பெரிய நகரமான ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தலிபான் நிர்வாகம் அவ்வட்டாரத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது என்று ஹெராட் மாநில தலிபான் பேரிடர் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த மூசா அசாரி தெரிவித்தார்.
“ஸெண்டே ஜான் மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன,” என்று சனிக்கிழமை அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இடிபாடுகளிலிருந்து காயமடைந்த 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இதுவரை காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம், ஹெராட் மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 12 ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி காயமடைந்தவர்களை வெளியேற்ற உதவியிருக்கிறது.
அந்த பகுதிகள் தொலைவில் இருப்பதால் மீட்புப் பணிகள் கடினமாகியுள்ளன. மேலும் அவ்வட்டாரத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலிபான் நிர்வாகமும் மீட்பு நடவடிக்கைகள், காயம் அடைந்தவர்களுக்கான போக்குவரத்து, வீடற்றவர்களுக்கு முகாம், உணவு விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
காலை 11 மணியளவில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோது ஹெராட்டில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
“நாங்கள் அலுவலகத்தில் இருந்தோம். திடீரென கட்டடம் ஆடியது,” என்று 45 வயது குடியிருப்பாளர் பஷீர் அஹமட் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
“சுவரில் ஒட்டப்பட்டிருந்த அலங்காரங்கள் பிய்த்து எறியப்பட்டன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சில சுவர் மற்றும் பகுதிகள் மளமளவென இடிந்துவிழுந்தன, எல்லாமே பயங்கரமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.