ஜோகூரில் புகைமூட்டம்: மக்கள்முகக்கவசம் அணிய வலியுறுத்து

1 mins read
8f11963b-bb31-4606-9842-4041c57d178f
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 2023 அக்டோர் 3ஆம் தேதி நிலவிய புகைமூட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூரில் பல இடங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாகிவிட்டது.

ஆகையால், முகக்கவசத்தைப் பயன்படுத்தும்படி மாநில, மத்திய சுகாதாரக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஜோகூர் மாநிலத்தில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாகிவிட்டதாக அவர் கூறினார்.

தெங்காக், செகாமட், பத்து பகாட், லார்கின், பாசிர் கூடாங் ஆகியவை அந்த ஐந்து பகுதிகள் என்று திங்கட்கிழமை அவர் தெரிவித்தார்.

இதர மூன்று பகுதிகளிலும் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காற்றுத்தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்றுத்தரம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள்.

காற்றுத் தர அளவு 51 முதல் 100 வரை எனில் தரம் மிதமான நிலையை எட்டி இருக்கிறது என்றும் 101 முதல் 200வரை எனில் மோசம் என்றும் 201 முதல் 300 வரை என்றால் மகாமோசம் என்றும் 300ஐத் தாண்டினால் ஆபத்து என்றும் மலேசியாவின் சுற்றுப்புற அமைச்சின் கணக்கீடு தெரிவிக்கிறது.

காற்றுத் தரம் மோசமடைவதால் வெளியே செல்லும்போது முகக்கவசத்தை அணியும் படி திரு லிங் வலியுறுத்தினார். குறிப்பாக சுவாசப் பிரச்சினை இருப்போர் மிகக்கவனமாக இருந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்