தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலுக்கான பல விமானச் சேவைகள் ரத்து

2 mins read
b3f2cb38-829d-4d63-bdf4-b87dd89c15b1
டெல் அவிவ் நகருக்கான விமானச் சேவைகளை கேத்தே பசிபிக் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் கடுமையான போரில் ஈடுபட்டுள்ள வேளையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கான பல அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வட்டாரத்தில் பாதுகாப்பு மேம்படும் வரை தடை அமலில் இருக்கும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகள், குறைந்தது 700 இஸ்ரேலியர்களைக் கொன்று பலரை பிணைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மூர்க்கமான போரை ஹமாஸ் தொடுத்துள்ளது.

இஸ்ரேலும் தக்க பதிலடியாக குண்டு மழை பொழிந்து காசா வட்டாரத்தை உருக்குலைத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை டெல் அவிவ் நகருக்கான நேரடி விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஏர் ஃபிரான்சும் இதே முடிவை எடுத்துள்ளது.

சீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரே விமானச் சேவையான ஹெய்னான் ஏர்லைன்சும் திங்கள்கிழமை டெல் அவிவ், ஷாங்காய்க்கு இடையிலான சேவையை ரத்து செய்துள்ளது.

இந்நிறுவனம் பெய்ஜிங்-டெல் அவிவ், ஷென்ஷென்-டெல் அவிவ் ஆகியவற்றுக்கான விமானச் சேவைகளை நடத்தி வருகிறது. சூழ்நிலையைப் பொறுத்து இந்தச் சேவைகள் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.

கேத்தே பசிபிக் ஏர்வேசும் ஹாங்காங்-டெல் அவிவ், டெல் அவிவ்-ஹாங்காங் சேவைகளை ரத்து செய்வதாக திங்கட்கிழமை அறிவித்தது. அடுத்த விமானச் சேவைகள் குறித்து வியாழக்கிழமை தெரிவிப்பதாக அது கூறியுள்ளது.

கொரியன் ஏர் நிறுவனமும் அதன் துறைமுக நகரான இன்சியானுக்கும் டெல் அவிவுக்கும் இடையிலான விமானச் சேவையை ரத்து செய்வதாக திங்கட்கிழமை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்