தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ் அடிக்கு இஸ்ரேல் பதிலடி; பாலஸ்தீனர்கள் 500 பேர் மரணம்

2 mins read
6de52202-b733-4476-97cc-4add6857619c
காஸாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பெருஞ்சேதம். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஜெருசலேம்: பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத இயக்கம், 50 ஆண்டுகால வரலாறு காணாத அளவுக்குத் திடீர் தாக்குதல் நடத்தி 700 இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்ததற்குப் பதிலடியாக, பாலஸ்தீன காஸா பகுதியை இரவு நேரத்தில் இஸ்ரேல் பயங்கரமாகத் தாக்கியது.

இஸ்ரேல் வீட்டுக் கட்டடங்கள், சுரங்கப் பாதைகள், பள்ளிவாசல், ஹமாஸ் பிரமுகர்களின் வீடுகள் எங்கும் நடத்திய தாக்குதலில் 493பேர் மாண்டு விட்டனர். அவர்களில் சிறார்கள் 20 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு இஸ்ரேல் தாக்குதலில் 2,751 பாலஸ்தீனர்கள் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டது.

இதனிடையே, இஸ்ரேலைத் தீவிரவாத ஹமாஸ் இயக்கம் தாக்கியதற்குப் பதிலடியாக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கை, காஸா பகுதியில் பல தலைமுறைகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் லெப்டினன் கர்னல் ரிச்சர்ட் ஹெட், காஸா பகுதிக்கு அருகே ஏழு அல்லது எட்டு இடங்களில் மோதல் நடந்து வருவதாக திங்கட்கிழமை கூறினார். இஸ்ரேலுக்குள் இன்னமும் ஹமாஸ் போராளிகள் ஊடுருவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லாம் பழைய நிலைக்கு வர எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கி வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு இஸ்ரேல் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் காஸா பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகள் அழிக்கப்பட்டன.

ஹமாஸ் தளபத்திய நிலையங்களும் மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவரின் வீடும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“இந்தப் போர் முடியும்போது ஹமாஸ் தரப்பிடம் எந்த பலமும் இருக்காது.

“அது இனிமேல் இஸ்ரேலியக் குடிமக்களுக்கு மிரட்டலாக இருக்காது.

“அதோடு மட்டுமல்ல. காஸா பகுதியில் ஹமாஸ் தரப்புக்கு எந்த ஆளுமை அதிகாரமும் இருக்காது. இப்படி ஒரு நிலை இந்த போரின் முடிவில் உருவாகும்.” என்று அந்த இஸ்ரேலிய பேச்சாளர் கூறினார்.

இதனிடையே, காஸாவுக்கு அப்பால் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா தரப்பினருக்கும் இடையில் பீரங்கி, எறிபடை தாக்குதல் நடந்தது.

அதே வேளையில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு சுற்றுப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

காஸா போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டும்படி உலகம் முழுவதிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், போர் நிலவரம் பற்றி கருத்து கூறிய பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர், இஸ்ரேல் காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபடுகிறது என்றார்.

இந்தச் சூழலில், இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகளுக்கும் படைகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை மோதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காஸா நெடுகிலும் ஆயிரக்கணக்கான படை வீரர்களைக் குவித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிக்கிறார்கள். காஸா பகுதி அருகே உள்ள இடங்களில் இருந்து குடிமக்களை இஸ்ரேல் அப்புறப்படுத்தி வருகிறது.

காஸாவில் சக்கர நாற்காலியில் நடமாடும் அல் அத்தார் என்ற பாலஸ்தீனர், இந்தப் போர், தான் சந்திக்கும் ஐந்தாவது போர் என்றும் மோதல் முடிவுக்கு வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.