தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கர நிலநடுக்கம்: தொடரும் மீட்பு பணி

1 mins read
fa058a41-0406-403a-88bc-2ff45fbd93a7
ஆப்பகானிஸ்தானில் ஹீரட் என்ற நகரின் ஸிண்டா ஜன் என்ற பகுதியில் நிலநடுக்கம் காரணமாக மாண்டுவிட்ட தன் பிள்ளை யின் உடலைத் தூக்கி வரும் ஆடவர். - படம்: ராய்ட்டர்ஸ்

காபூல்: ஆப்கானிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹீரட் என்ற நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த நிலநடுக்கம் இந்த ஆண்டின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

அந்தப் பேரிடரில் குறைந்தபட்சம் 2,400 பேர் கொல்லப்பட்டதாகவும் மிக அதிகமானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் இன்னமும் பலர் உயிரோடு புதைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மீட்பு பணியாளர்களை அனுப்பி ஆப்கானிஸ்தானின் மீட்பு பணிகளில் உதவ பாகிஸ்தான், ஈரான் நாடுகள் முன்வந்து இருக்கின்றன. மனிதாபிமான உதவிகளை வழங்கியிருக்கின்றன.

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் நிதி உதவி அளித்து இருக்கிறது.

இந்த நிலையில், மீட்புப் பணிகள் மிக மும்முரமாக தொடர்ந்து வருவதாக ஹீரட் நகரின் ஆளுநரின் பேச்சாளர் நிசார் அஹமது இலியாஸ் தெரிவித்தார்.

ஹீரட் நகரைச் சுற்றிலும் உள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இன்னமும் சிலர் உயிரோடு மீட்க்கப்பட்டு வருகிறார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஹீரட் நகரைச் சேர்ந்த திரு அஹமது இலியாஸ், தன் குடும்ப உறுப்பினர்களில் பலரும் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க இடுப்பாடுகளுக்கு இடையில் உயிரோடு சிக்கி இருப்போரை மீட்கவும் இறந்தவர்களின் உடலை மீட்கவும் முழு மூச்சாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்