இஸ்கந்தர் புத்தேரி: ஜோகூர் அருகிலுள்ள கேலாங் பத்தாவில் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டு ஊழியர்களுக்குப் போலியான தற்காலிக வேலை அனுமதிச்சீட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தொடர்புடைய நான்கு பங்ளாதேஷியர், ஒரு நேப்பாள நாட்டவர், மலேசிய நிரந்தரவாசத் தகுதிபெற்ற பங்ளாதேஷியர் ஒருவர் ஆகியோரைக் கைதுசெய்துள்ளதாகக் குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹருதீன் தாஹிர் கூறினார்.
“நான்கு இந்தியக் கடப்பிதழ்கள், ஒரு கணினி, ஆறு கைப்பேசிகள், சந்தேகத்திற்குரிய போலிப் பயண ஆவணங்கள் மற்றும் அனுமதிச்சீட்டுகள், 320 ரிங்கிட் பணம் ஆகியவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாகத் திங்கட்கிழமை அவர் தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை, மலேசிய நிரந்தரவாசத் தகுதிபெற்ற பங்ளாதேஷியர் ஒருவர் நடத்தி வந்தார் என்றும் அவர் போலியான பயண ஆவணங்கள், விமானச் சீட்டுகள், இ-விசா ஆகியவற்றைத் தயாரித்துப் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் லாபம் ஈட்டியதாக நம்பப்படுகிறது என்றும் திரு பஹருதீன் சொன்னார்.
இதுபோன்று போலி ஆவணங்கள் தயாரிக்கும் வெளிநாட்டினர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் அதனை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.