மியன்மார் கச்சின் மாநிலத்தில் பீரங்கித் தாக்குதல்; பலர் மரணம்

மியன்மார் கச்சின் மாநிலத்தில் பீரங்கித் தாக்குதல்; பலர் மரணம்

படம்: ஏஎஃப்பி

10 Oct 2023 - 3:50 pm

2 mins read

யங்கூன்: மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பலரும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களும் ஆர்வலர்களும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகான ராணுவ ஆட்சியின் கடுமையான ஒடுக்குமுறைக்கு எதிராக சிறுபான்மையின ராணுவங்களும் ராணுவ ஆட்சி எதிர்ப்பு இயக்கமும் அந்நாட்டின் பல வட்டாரங்களிலும் தொடர்ந்து போராடி வருகின்றன.

மியன்மாரின் ஆளும் ராணுவத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கும் கச்சின் சுயேட்சை ராணுவம் (கேஐஏ) நடத்தும் ராணுவ முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தாக்குதல் நடந்ததாக கச்சின் ஊடகங்களும் உள்ளூர் தகவல்களும் தெரிவித்தன.

மியன்­மா­ரில் போட்டி அர­சாங்­கம் நடத்­தும் தேசிய ஒற்­றுமை அரசின் அமைச்சர் ஒருவர் தாக்குதல் தொடர்பான செய்திகளையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். எனினும், உறுதிப்படுத்துவதற்காக ஊடகங்கள் அழைத்தபோது அவர் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடந்ததாக கச்சின் சுயேட்சை ராணுவ அதிகாரி கர்னல் நவ் பு ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“குழந்தைகள், முதியோர் உட்பட 29 உடல்களை நாங்கள் கண்டோம். 56 பேர் காயமடைந்தனர்,” என்று அவர் கூறினார். முகாமில் எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சீன எல்லையில் உள்ள லைசா நகருக்கு அருகே உள்ள முகாமை குறிவைக்க ராணுவம் ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தியதா என்பதை அவர்கள் ஆராய்கின்றனர்.

கச்சின் அமைதி கட்டமைப்பு பொது சமூகக் குழுவைச் சேர்ந்த ஆர்வலரான திருவாட்டி கோன் ஜா, 29 பேர் இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

“தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. வெடிகுண்டுத் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்தது. கிராமம் முற்றிலும் அழிக்கப்பட்டு சுவடின்றிப் போனது,” என்று அவர் சொன்னார்.

வடக்கு மியன்மார் நகரமான லைசா, பல ஆண்டுகளாக ராணுவத்துடன் போராடி வரும் ஆகப்பெரிய இனக் குழுவான கச்சின் சுயேட்சை ராணுவத்தின் தலைநகரம் ஆகும்.

சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்நகரம், இடப்பெயர்வு முகாம்களில் வசிக்கும் பலரின் தாயகமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்தாக்குதல்பீரங்கித் தாக்குதல்