நூற்றுக்கணக்கான ஐஃபோன்களை கடத்த உதவிய விமான நிலைய ஊழியர் கைது

2 mins read
5dc0d249-c979-4b90-9ae1-bbd615a3de3f
வியட்னாமில் ஐஃபோன்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றின் விலை அதிகமாக இருந்தாலும் தேவை குறைந்தபாடில்லை. - படம்: ஏஎஃப்பி

வியட்னாமுக்குள் நூற்றுக்கணக்கான ஐஃபோன்களைக் கடத்தியதற்காக ஆடவர் இருவரும் மாது ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

தேசிய விமான நிறுவனமான வியட்னாம் ஏர்லைன்சின் துணை நிறுவன ஊழியர் ஒருவரும் அவர்களில் அடங்குவார் என்று உள்ளூர் ஊடகம் திங்கட்கிழமை தெரிவித்தது.

லெ வான் ங்கோக், 43, நுயென் ஆன் துவான், 33, இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு உதவியதாகக் கூறப்படும் ங்கோக்கின் 29 வயது மனைவி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஹோ சி மின் சிட்டியில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் துவான் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் 12 புதிய ஐஃபோன் 14 புரோ மேக்ஸ் சாதனங்களை தாய்லாந்தில் இருந்து வியட்னாமுக்கு அவர் கொண்டு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

வியட்னாம் ஏர்லைன்ஸ் பொறியியல் நிறுவனத்தில் விமானப் பழுதுபார்ப்புக்குப் பொறுப்பு வகித்த தொழில்நுட்பரான ங்கோக்குடன் சேர்ந்து துவான் சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. குறிப்பிட்ட காலகட்டத்தில் 20 பில்லியன் டோங் (S$1.12 மி.) மதிப்பிலான 600க்கும் மேற்பட்ட ஐஃபோன்களைக் கடத்த அவர்கள் முற்பட்டனர்.

விமான நிலையத்தில் தமது வேலை அட்டவணை குறித்த விவரங்களை துவானிடம் ங்கோக் தெரியப்படுத்துவார். அத்தகவலைக் கொண்டு தாய்லாந்தில் இருந்து ஹோ சி மின் சிட்டிக்கு விமானப் பயணத்தை துவான் முன்பதிவு செய்வார்.

தாய்லாந்தில் இருந்து தாம் கொண்டு வந்த ஐஃபோன்களை ங்கோக்கிடம் துவான் வழங்குவார். விமானப் பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்யும் வேளையில், ங்கோக் ஐஃபோன்களை தம் பைக்குள் மறைத்து வைத்துவிடுவார்.

சுங்கத்துறை பரிசோதனையைத் தவிர்ப்பதற்காக, உள்நாட்டு முனையம் வழியாக ங்கோக் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவார். கடத்தப்பட்ட ஐஃபோன்களை துவானிடம் ஒப்படைக்க அவர் ஏற்பாடு செய்வார்.

இறக்குமதித் தீர்வை செலுத்தாமல் ஐஃபோன் கடத்த துவானுக்கு உதவிய ங்கோக்கிற்கு, தரகுக் கட்டணமாக ஒரு ஐஃபோனுக்கு 900,000 டோங் (S$50) கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக, ங்கோக்கும் அவருடைய மனைவியும் ஏறத்தாழ 500 மில்லியன் டோங் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், ஹோ சி மின் சிட்டி காவல்துறை தலைமையிலான விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்