இஸ்‌ரேலுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர்

1 mins read
d89dbf09-bce7-4574-b923-44422cf497f8
ஹமாஸ் தீவிரவாதத் தாக்குதலில் 1,000க்கு மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக வாஷிங்டனில் உள்ள இஸ்‌ரேலியத் தூதரகம் கூறியது. - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல்மீதான ஹமாஸ் தீவிரவாதக் குழுவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

“இது மிகவும் கொடுமையான தீய செயல்,” என்று உணர்வுபூர்வமான குரலில் சாடிய திரு பைடன், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

வேவுத் தகவல்களைப் பகிரவும் பிணைபிடிக்கப்பட்டோரை மீட்பதற்கான வல்லுநர்களை அனுப்பிவைக்கவும் அவர் உறுதியளித்தார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அவர், ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்கர்கள் யாரையேனும் பிணை பிடித்திருக்கக்கூடும் என்பது குறித்துக் கவலை தெரிவித்தார்.

சென்ற சனிக்கிழமை ஹமாஸ் குழுவினர் காஸாவிலிருந்து இஸ்‌ரேல்மீது நடத்திய தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் மாண்டதாகத் தெரிகிறது.

அமெரிக்கர்கள் 20 பேரைக் காணவில்லை என்று கூறிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அவர்கள் பிணை பிடிக்கப்பட்டனரா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்